பிரேசில் கட்டிட விபத்து- பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு
பிரேசில் நாட்டில் ரியோ தி ஜெனெரியோ பகுதியில் 2 கட்டிடங்கள் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
பிரேசில் நாட்டின் கடல் பரப்பில் உள்ள நகரமான ரியோ தி ஜெனெரியோ பகுதியில் முசேமா சமூக ஏழை மக்கள் வசிக்கும் இடம் உள்ளது. இங்கு கடந்த 12ம் தேதி 4 மற்றும் 6 அடுக்கு மாடிகளை கொண்ட 2 கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மீட்பு பணியினருடன் போலீசார் விரைந்தனர். இந்த விபத்தில் இதுவரை 24 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
இந்த கட்டிடங்கள் மேயரின் அனுமதியின்றி, கட்டுமான பணிகள் ஒழுங்கின்றி கட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இப்பகுதியில் இது போன்று 60 கட்டிடங்கள் முறையாக கட்டப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளன.
இது குறித்து மேயர் மார்செலோ சிவேல்லா கூறுகையில், ‘இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு அரசு, மக்களை பாதிப்பு நேரிடக்கூடும் என எச்சரித்தால், அதனை புரிந்துக் கொண்டு மக்கள் செயல்பட வேண்டும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. சட்டப்படி நடந்துக் கொண்டால் இது போன்ற சம்பவங்களை முற்றிலும் தடுக்க இயலும்’ என கூறினார்.