பிரேசில் அனர்த்தம்: உயிரிழப்புகளுக்கு மத்தியில் சிறுமியொருவர் உயிருடன் மீட்பு

பிரேசில் அணை உடைப்பெடுத்து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், சிறுமியொருவர் தெய்வாதீனமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

அனர்த்தத்தில் காணாமல்போன தனது தங்கையை உயிருடன் மீட்கும் முயற்சியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு சகோதரனினாலேயே குறித்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் 15 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சேற்றுக்குள் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த சிறுமியை கண்டவர்கள் உடனடியாக மீட்பு பணியாளர்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து ஹெலிகொப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு பணியாளர்கள், குறித்த சகோதரன் மற்றும் அவரது நண்பரின் உதவியுடன் சிறுமியை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இந்த வியத்தகு மீட்பு பணி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ள அதேவேளை, துணிந்து மீட்பு பணியில் ஈடுபட்ட பிரதேசவாசியை நாடளாவிய ரீதியில் புகழின் உச்சிக்கு கொண்டு போயுள்ளது.

தென்கிழக்கு பிரேசிலின் புருமடின்ஹோ பகுதியிலுள்ள அணை உடைப்பெடுத்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99ஆக அதிகரித்துள்ளது.

250இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ள நிலையில், காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை மீட்பு பணியாளர்கள் மத்தியில் மங்கி வருகின்றது.

உலகின் மிகப்பெரிய இரும்பு மற்றும் தாது சுரங்கத்தை நடத்திவரும் ஏயடந என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த அணை கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை உடைப்பெடுத்து பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !