பிரேசில் அனர்த்தத்தில் புதையுண்ட பேருந்து கண்டுபிடிப்பு! – உயிரிழப்பு அதிகரிப்பு

தென்கிழக்கு பிரேசிலில் அணை உடைப்பெடுத்த அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதையுண்ட பேருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, உயிரிழப்புகளின் எண்ணிக்கை 65ஆக அதிகரித்துள்ளது.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புப் படையினர் மற்றும் இஸ்ரேல் மீட்புப் படையினர் நேற்று (திங்கட்கிழமை) குறித்த பேருந்தை நெருங்கினர்.

சேற்றில் சிக்கிய மாடு ஒன்றை மீட்பதற்காக கிராம மக்கள் முயற்சித்தபோது, அங்கு பேருந்தின் டயர் தெரிந்துள்ளது. அதனடிப்படையில் அங்கு சென்ற மீட்புப் படையினர் பேருந்திலிருந்து சடலங்களை மீட்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். தற்போதுவரை 65 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனினும், சுமார் 300 பேர்வரை காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை உயிருடன் மீட்கும் சாத்தியம் மிகவும் அரிதாகவே உள்ளதென மீட்புப் பணியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிரேசிலின் இரும்பு மற்றும் தாது அகழ்வில் ஈடுபடும் சுரங்க நிறுவனமான Valeஇற்குச் சொந்தமான குறித்த அணை, கடந்த 25ஆம் திகதி உடைப்பெடுத்தது.

இதில் காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் சுரங்க நிறுவன பணியாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த அனர்த்தம் தொடர்பாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், பாதுகாப்பு தொடர்பான சகல நெறிமுறைகளையும் கையாண்டதாக குறித்த நிறுவனம் கூறுகின்றது. அத்தோடு, மீட்பு மற்றும் மீள்கட்டுமான பணிகளுக்கு பெருமளவு நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.

இதேவேளை, குறித்த நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றுமொரு அணையும் தற்போது ஆபத்தை எதிர்கொண்டுள்ளதால் மீட்பு நடவடிக்கைகள் நிதானமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !