பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படாது : ஐரோப்பிய ஒன்றியம் உறுதி!
பிரதமர் தெரேசா மே-க்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பிரதமர் தெரேசா மே பதவி விலகுவதைத் தொடர்ந்து புதிதாக பதவியேற்கும் பிரதமர் பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தூண்டக்கூடுமென எழுந்துள்ள எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஐரோப்பிய ஆணையத் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பதவிக்கு போட்டியிடும் போட்டியாளர்கள் பிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென உறுதியளித்துள்ள நிலையில் ஜீன் க்ளூட் ஜூங்கர் அதை நிராகரித்துள்ளார்.
நேற்று பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கான உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜூங்கர் பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படாது என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார்.