பிரெக்ஸிற்றின் பின்னரும் பிரித்தானியர்களின் வீசா இல்லாத பயணத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு!

பிரெக்ஸிற்றின் பின்னரும் பிரித்தானியர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு வீசா இல்லாத பயணத்தை மேற்கொள்வதற்கான முன்மொழிவை ஐரோப்பிய பாராளுமன்ற குழுவொன்று முன்வைத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தத்துடனோ அல்லது ஒப்பந்தம் எதுவுமின்றியோ பிரித்தானியா வெளியேறியதன் பின்னரும் பிரித்தானியர்களுக்கு இச்சலுகை வழங்கப்படுவதற்கு இக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இக்குழுவின் பரிந்துரை அடுத்த மாதம் ஐரோப்பிய பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவும் தமது மக்களுக்கு பரஸ்பர வீசா சலுகைகளை வழங்கும் பட்சத்தில் பிரித்தானியர்களுக்கு வீசா இல்லாத பயணச் சலுகைகளை வழங்குவதற்கு பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த வீசா விதிவிலக்கு மூன்று மாதங்கள் வரையிலான குறுகிய பயணங்களுக்கு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வீசா சலுகை வணிக மற்றும் சுற்றுலாத்துறைக்காக மாத்திரமே வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்வதற்கான உரிமையை உள்ளடக்கவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !