பிரெக்சிற்: மக்கள் ஆதரவை கோரி பிரதமர் தெரேசா மே கடிதம்!

பிரெக்சிற் ஒப்பந்தத்திற்கு பிரித்தானிய மக்கள் அனைவரும் ஆதரவு வழங்கவேண்டுமென கோரி, பிரதமர் தெரேசா மே கடிதமொன்றை எழுதியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரசல்சிஸ் இடம்பெறவுள்ளது. இதில் பிரெக்சிற் உடன்படிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கீகாரம் பெறப்படவுள்ளது. இந்நிலையில், பிரித்தானிய மக்கள் அனைவரும் இதனை ஆதரிக்கவேண்டுமென பிரதமர் மே கோரியுள்ளார்.

பிரித்தானியாவிற்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளதென்பதை குறித்த ஒப்பந்தம் எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மே, நாட்டை புதுப்பிக்கவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் பிரெக்சிற் நடவடிக்கையானது, தமது நாட்டிற்கு ஒரு புதிய அத்தியாயமாக அமையுமென பிரதமர் மே அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரசல்ஸில் இன்று நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில், குறித்த ஒப்பந்தத்திற்கு முழு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள பிரதமர் மே முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றார். ஒன்றியத்தின் சகல நாடுகளும் இதனை அங்கீகரிக்குமென ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

ஜிப்ரால்டர் விவகாரத்தால் மாநாட்டை புறக்கணித்த ஸ்பெயின், கடைசி நிமிடத்தில் மாநாட்டில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று பிரெக்சிற் உடன்படிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கீகாரத்தை பிரதமர் மே பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு பெரும்பாலும் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கீகாரம் கிடைத்தாலும், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அது நிறைவேற்றப்படுவது அவசியமாகும்.

இதேவேளை, பிரதமர் மேயின் கொன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளடங்களாக பலர், பிரெக்சிற் உடன்படிக்கைக்கு எதிராக வாக்களிப்போம் என தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !