பிரெக்சிற் ஒப்பந்தத்திற்கு புத்தாண்டு செய்தியூடாக ஆதரவு கோரிய பிரதமர் மே

உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதியளித்த பிரதமர் தெரேசா மே, தனது பிரெக்சிற் ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்குமாறு சட்டமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளார்.

தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியின் ஊடாக பிரதமர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதியுடன் வெளியேற தீர்மானித்துள்ள நிலையில், அது தொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்பிற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”2019ஆம் ஆண்டில் பிரித்தானியா ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும். எதிர்வரும் சில வாரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

2019ஆம் ஆண்டு வேறுபாடுகளை கலையும் ஆண்டாக அமையும். அந்தவகையில் ஐரோப்பிய ஒன்றியத்தினருடன் வலுவான புதிய உறவை நோக்கி முன்னோக்கி நகர வேண்டும்.

கடந்த ஆண்டில் பல விடயங்களை சாதிக்கக் கூடியதாக இருந்தது. அதேபோன்று 2019ஆம் ஆண்டிலும் ஒன்றிணைந்து பணியாற்றி வெற்றி பெற முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !