Main Menu

பிரித்தானியா செல்லும் தொழிலாளர்கள் மொழித் தேவைகளைப் பூர்த்தி செய்வது அத்தியாவசியம்!

பிரெக்ஸிற் பிந்தைய விதிகள் நடைமுறைக்கு வருவதனால் தொழிலாளர்கள், வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவதற்கு மொழித் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்பது அடுத்த ஆண்டு முதல் அத்தியாவசியம் ஆக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா உத்தியோகப்பூர்வமாக வெளியேறினாலும் சிறிய மாற்றங்கள் கொண்டுவருவதற்கான காலம் டிசம்பர் 31 வரை நடைமுறையில் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய மக்கள் உறுப்பு நாடுகளுக்கு இடையில் சுதந்திரமாக செல்ல முடிகின்றமையினால் நாட்டிற்கு வரும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் பெருமளவான பிரித்தானிய மக்கள் பிரெக்ஸிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எனவே “அடுத்த ஆண்டு முதல், அனைத்து திறமையான தொழிலாளர்களும் இங்கிலாந்தில் வேலை செய்ய போதுமான புள்ளிகளைப் பெற வேண்டும். அவர்கள் ஆங்கிலம் பேச வேண்டும், உறுதியான வேலை வாய்ப்பைக் கொண்டிருக்க வேண்டும், சம்பளத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்” என உள்த்துறை அமைச்சர் பிரிதி படேல் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், “குடியேற்றத்திற்கான கட்டுப்பாடுகள், சில பகுதிகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களாக பணிபுரியும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களை நம்பியுள்ள தேசிய சுகாதார சேவை போன்ற பொது சேவைகளுக்கு தீங்கு விளைவிக்கும்” என சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.