பிரித்தானியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கமில்லை: ஜேர்மனி

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நோக்கம் இல்லை என, ஜேர்மனியின் ஐரோப்பிய ஒன்றிய விவகார அமைச்சர் மைக்கல் றொத் தெரிவித்தார்.

மேலும், வெளியேற்ற ஒப்பந்தமொன்றை எட்டுவது என்பது அத்தகைய இலகுவான விடயமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய கவுன்சிலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அமைச்சர்களுடனான சந்திப்பை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ”மிகவும் கடினமான பேச்சுவார்த்தைகளின் விளைவாக கடும் முயற்சிக்கு மத்தியில் எமது ஆற்றல், நேரம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை செலவிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தற்போதைய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மீண்டுமொரு விவாதத்தை ஆரம்பிப்பது என்பது முடியாத செயலாகும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பிரான்ஸ் அமைச்சர் உரையாற்றுகையில், ”பிரெக்சிற் ஒப்பந்தம் குறித்த நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டமை குறித்த நாம் கூடுதல் கரிசனை கொண்டுள்ளோம். தற்போதைய ஒப்பந்தத்தை எட்டுவதற்கு பிரித்தானியாவிற்கு நாம் நிறைய உதவி செய்துள்ளோம். அதன்படி, தற்போதை ஒப்பந்தமே சாத்தியமானதொன்றாகும். இந்நிலையில், உடன்பாடற்ற பிரெக்சிற்கும் தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதற்கான தயார்ப்படுத்தல்களிலும் நாம் ஈடுபட்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !