பிரித்தானியாவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படாது: ஐரோப்பிய ஒன்றியம் உறுதி

பிரெக்ஸிற் தொடர்பாக பிரித்தானியாவுடன் இனி எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இக்கருத்து  உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது பிரதமர் தெரேசா மே-யின் திருத்தப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டதையடுத்தே ஐரோப்பிய ஒன்றியம் இக்கருத்தை வெளியிட்டுள்ளது.

பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை ஈட்டுவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்ஸிற் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பர்னியர் தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிற் தொடர்பாக நிலவும் முட்டுக்கட்டையை முறியடிப்பதற்கு பிரித்தானியாவால் மாத்திரமே முடியுமெனவும் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான தமது தயார்ப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னரைவிட இப்போது முக்கியமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் ரஸ்க் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் ஒருங்கிணைந்த அறிக்கையிலும் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை அடைவதற்காக தம்மால் இயன்ற அனைத்தையும் தாம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !