பிரித்தானியாவில் கைதான நான்கு இலங்கையர்களும் விடுதலை
பிரித்தானியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைதான நான்கு இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
லண்டன் – லுட்டன் விமானநிலையத்தில் கடந்த வாரம் அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் எந்த குற்றச்சாட்டுகளும் இன்றி கடந்த வெள்ளிக்கிழமையே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
த மோர்னிங் ஸ்டார் ஊடகத்தின் தகவல்படி குறித்த நான்கு இலங்கையர்களும், பிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோருவதற்காக சென்ற தமிழர்கள் என்று தெரியவருகிறது.
கடந்த புதன்கிழமை லூட்டன் விமானநிலையத்தில் அதிகாரிகளால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட போது, விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டதாக தெரிவித்து இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றுடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு வியாழக்கிழமை வரையில் தடுத்து வைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமையே விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அவர்கள் தொடர்பான விசாரணைகளை மெற்ரோ போலிட்டன் காவற்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.