பிரான்ஸ் போராட்டம்: எல் ஓபரா டி பரிஸ் அரங்கிற்கு 8 மில்லியன் வருவாய் இழப்பு!
பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தினால், எல் ஓபரா டி பரிஸ் அரங்கிற்கு 8 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுவடைந்துவரும் இந்த போராட்டத்தினால், எல் ஓபரா டி பரிஸ் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, பல நிகழ்ச்சிகளுக்கு முன்னதாகவே நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சி இரத்து பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தமாக இதுவரை டிசம்பர் 5 ஆம் திகதியின் பின்னர் 45 நிகழ்ச்சிகளை இரத்துச் செய்துள்ளததாகவும், இதனால் எட்டு மில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்துள்ளதாகவும் எல் ஓபரா டி பரிஸ் அரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் உச்சமடைந்துவரும் நிலையில், இருபதாவது நாளாக இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து, தேசிய ரீதியில் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்ததற்கு அமைய, கடந்த 5ஆம் திகதி முதல் பிரான்ஸின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல பொது இடங்கள் முடங்கிப் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.