பிரான்ஸ் தேசிய தினத்தை முன்னிட்டு சோம்ப்ஸ்-எலிசேயில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

தேசிய நாளின் நிகழ்வுகள் இன்னும் சில மணித்துளிகளில் சோம்ப்ஸ்-எலிசே பகுதியில் இடம்பெற உள்ளது. இந்நிலையில் எந்த அசம்பாவிதங்களும் இடம்பெறாமல் தடுக்க உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சோம்ப்ஸ்-எலிசே பகுதியைச் சுற்றி 11,000 காவல்துறையினர் மற்றும் ஜோந்தாமினர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய தேசிய தின நிகழ்வில் கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இதனால் மேலும் சிறப்பு பாதுகாப்பாக கடந்த வருடத்தை விட மேலதிகமாக 300 வீரர்கள் வரை பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இராணுவ அணிவகுப்பின் போது பாதுகாப்பு வழங்க 3,500 வீரர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். தவிர, தீயணைப்பு படை வீரர்கள், மீட்புக்குழுவினர், எந்த நேரமும் செயற்பட தயாராக இருக்கும் RAiD படையினர் என முன் எப்போதும் இல்லாத அளவு, உச்சக்கட்ட பாதுகாப்பினை உறுதி செய்துள்ளது சோம்ப்ஸ்-எலிசே பகுதி!
மொத்த பரிஸ் முழுவதும், 2,900 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தவிர, டொனால்ட் ட்ரம்பின் பாதுகாப்புக்காக அமெரிக்க வீரர்களும் களத்தில் உள்ளனர். தரை மற்றும் வான் வழி பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !