பிரான்ஸ்-ஜேர்மனி இடையே புதிய ஒப்பந்தம்!

பரஸ்பரம் தமது நாடுகளின் உறவுநிலையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி இடையே இன்று புதிய உடன்படிக்கையொன்று கையொப்பமிடப்பட்டுள்ளது.

1963 போருக்குப் பிந்தைய சமரச உடன்படிக்கையை புதுப்பிக்கும் பொருட்டு ஜேர்மனியின் ஆர்ச்சென் நகரில் இவ்வுடன்படிக்கை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கல் ஆகியோரால் கையொப்பமிடப்பட்டுள்ளது.

பிரெக்க்ஸிற், குடியேற்றம் மற்றும் யூரோமண்டல நெருக்கடி ஆகியவற்றால் திசை திருப்பப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமைக்கு ஊக்கமளிக்கும் வகையில் இவ்வுடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

உறுதியான, தெளிவான, முன்னோக்கிய பதில்களை வழங்குவதற்காகவே இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளதாக ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கல் தெரிவித்தார்.

மேலும் ஐரோப்பிய ராணுவம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் பிரான்சுடன் இணைந்து செயற்படுவதற்கும் அங்கெலா மேர்க்கல் சம்மதம் தெரிவித்துள்ளார்.

தேசியவாதம், பிரெக்க்ஸிற் மற்றும் ஏனைய உலகளாவிய மாற்றங்களால் ஐரோப்பா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜேர்மனியும் பிரான்சும் வழிகாட்டிகளாக செயற்படவேண்டியது அவசியமென இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.

பாதுகாப்பு கொள்கை, வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம், போக்குவரத்து மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகள் உட்பட பல பிற பகுதிகளில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதை இவ்வுடன்படிக்கை வலியுறுத்துகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !