பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு!

மைக்ரோசொஃப்ட் நிறுவுனரும், உலக செல்வந்தருமாக விளங்கும் பில் கேட்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் பரிஸ் எலிஸி மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பில், பில் கேட்ஸின் மனைவியும் தொழிலதிபருமான மெலிண்டா கேட்ஸும் கலந்துக் கொண்டிருந்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதியுடனான சந்திப்பை தொடர்ந்து கருத்து தெரிவித்த பில் கேட்ஸ், ”ஜனாதிபதி மக்ரோனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தமையை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன். எனது வாழ்க்கை துணையான மெலிண்டாவும் நானும், மெக்ரோனுடன் சிறப்பான சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தோம்.

இதன்போது, சுகாதார மற்றும் வேளாண்மை போன்ற துறைகளின் சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், அதற்கான மேம்பாடு மற்றும் அர்ப்பணிப்பு குறித்தும் கலந்துரையாடினோர். இதேவேளை, பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

சமீபத்திய ஆண்டுகளில் பில் கேட்ஸும், பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பிலும் உலகளாவிய ரீதியில் பல பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான உதவித் திட்டங்கள் ஆபிரிக்க நாடுகளை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !