பிரான்ஸ் கவிஞர் போவ்டெல்யாரின் தற்கொலை கடிதம் 2 லட்சம் யூரோவுக்கு ஏலம்!

பிரான்ஸைச் சேர்ந்த பெருங்கவிஞர் ஒருவரின் தற்கொலைக் கடிதம் ஒன்று சுமார் 2 லட்சம் யூரோக்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளமையானது அனைவரையும் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த பெருங்கவிஞன் சார்லஸ் போவ்டெல்யாரின் தற்கொலை கடிதம் சுமார் €234,000 யூரோக்களுக்கு (£204,000; $267,000) ஏலத்தில் எடுக்கப்பட்டது.

அவர் தனது தற்கொலைக் கடிதத்தை தன் காதலி ஜீன் டுவலுக்கு எழுதியிருந்தார். 1845 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி இந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது.

 

அந்த கடிதம் எழுதப்பட்டபோது அவருக்கு 24 வயதாகும். கடிதம் எழுதப்பட்ட அதே தினத்தில் தற்கொலைக்கு முயன்றவர் பின்னர் பிழைத்துக் கொண்டார்.

தான் ஏன் தற்கொலை செய்து கொள்ள போகிறார் என்பதை அந்தக் கடிதத்தில் விளக்கி இருந்த அவர், “இந்த கடிதம் உனக்கு கிடைக்கும் போது, நான் மரணித்து இருப்பேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

பரம்பரை சொத்தை ஊதாரித்தனமாக வீணடித்ததால் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த சார்லஸ், தன்னைதானே மார்பில் கத்தியால் குத்திக் கொண்டார். ஆனால், பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. அவரின் தற்கொலை முயற்சிக்குப் பின் 22 ஆண்டுகாலம் வாழ்ந்தார்.

தலைமுறைகள் கடந்தும் பிரான்ஸ் கவிஞர்களை வசீகரிப்பவராக இவர் திகழ்கிறார். அவர் எழுதிய ‘தீய மலர்கள்’ (The Flowers of Evil) தொகுப்பு அவருக்கு பெரும் மரியாதையை ஈட்டித் தந்தது.

இந்தநிலையில், நிர்ணயக்கப்பட்ட தொகையைவிட மூன்று மடங்கு தொகைக்கு அந்த கடிதம் ஏலத்தில் எடுக்கப்பட்டதாக பிரான்ஸ் ஏல விற்பனை இணையதளமான ஒஸ்நாட் தெரிவித்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !