பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 541 பேர் உயிரிழப்பு ! நீராவியடியைச் சேர்ந்த சாம்பவியும் மரணம்
பிரான்ஸின் சுகாதாரத்துறையினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள நாளாந்த அறிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 541ஆக பதிவாகியுள்ள நிலையில், இதுவரை பிரான்சில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 869ஆக உயர்ந்துள்ளது.
தொழில்நுட்பகோளாறு காரணமாக மூதாளர் இல்லங்களில் இடம்பெற்றுள்ள உயிரிழப்புக்களை கணக்கிட முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, 7 048 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 17 பேர் தீவிரசிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களாவர்.
இதுவரை பிரான்சின் மருத்துமனைகளில் 60 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தனர் எனவும் அவர்களில் 21 154 பேர் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் தவிர, தற்போது 30 033 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேவேளை நாளை வியாழக்கிழமை பிரான்சுக்கு கறுப்பு வியாழனாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளதோடு, இரவு 20h மணிக்கு அதிபர் ஏமானுவல் மக்ரோன் அவர்கள் நாட்டுமக்களுக்கு உரையாற்ற இருக்கின்றார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
இதேவேளை யாழ் .நீராவியடியை சேர்ந்த பாலசிங்கம் தம்பதிகளின் புதல்வியான 31 வயதுடைய உமாசுதன் சாம்பவி இன்று 08.04.2020 புதன்கிழமை காலை France Créteil பகுதியில் கொரொனா தொற்றிற்கு இலக்காகி உயிரிந்துள்ளார். இவர் யாழ்.இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தாய், தந்தை இல்லாத நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் Créteil பகுதியில் வசித்து வந்த நிலையிலேயே கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் இளவயது மரணங்களும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.