பிரம்மாண்டமாக உருவாகிறது கல்கியின் பொன்னியின் செல்வன் – தீவிர முயற்சியில் மணிரத்னம்

சிறந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் வருவது அதிகரித்து வருகிறது இந்த நிலையில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் பல்வேறு இயக்குநர்கள் முயற்சித்து கைவிட்டிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வாக்கு நிறைந்த நடிகரும் மறைந்த முன்னால் முதல்வருமான எம்.ஜி.ஆர் கூட இந்த நாவலை படமாக்க முயற்சித்துள்ளார். பிரபல இயக்குனர் மணிரத்னமும் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடைய நீண்டநாள் கனவு படமாக இது இருந்தது.

முன்னணி கதாநாயகர்கள் சேர்ந்து நடிக்க வேண்டிய படம் என்பதாலும், பெரிய பட்ஜெட் படம் என்பதாலும் உடனடியாக படவேலைகளை தொடங்க முடியாமல் தள்ளிப்போனது.

நாவலில் இடம்பெற்றுள்ள வந்தியத்தேவன், ராஜராஜ சோழன், பெரிய பழுவேட்டவர், ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், ஆதித்த கரிகாலன் மற்றும் குந்தகை, வானதி, நந்தினி கதாபாத்திரங்களுக்கு நடிகர்-நடிகைகளை தேர்வு செய்வதும் அவருக்கு சவாலாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படவேலைகளை மணிரத்னம் தீவிரப்படுத்தி உள்ளார். நடிகர்கள் தேர்வும் நடந்து வருகிறது.

ஏற்கனவே விஜய் சேதுபதி, சிம்பு ஆகியோரை இந்த படத்துக்கு தேர்வு செய்ததாகவும் பின்னர் இருவரும் அதில் இருந்து விலகி விட்டதாகவும் கூறப்பட்டது. அதில் எந்த அளவிற்கு உண்மைத்தன்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.

தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !