பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது – இந்து ராம்
பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது என்று இந்து பத்திரிகை குழுத்தின் தலைவர் என். ராம் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு. கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிபிசி தமிழுக்கு அவர் வழங்கிய நேர்காணலில், இறுதிப் போரில் கருணாநிதியால் புலிகளை காப்பாற்றியிருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் கருணாநிதி குறித்த பிபிசியின் கேள்விக்கு ராம் அளித்துள்ள பதிலை இங்க பிரசுரிக்கின்றோம்.
கேள்வி: இலங்கை தமிழர்கள் – விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன?
என். ராம்: ”விடுதலை புலிகள் எப்போதுமே கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் ஆட்சியை விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொலை செய்யப்பட்டதிலிருந்து அவருக்கு விடுதலை புலிகள் மீதிருந்த மரியாதை தகர்ந்தது .ராஜிவ் காந்தியை விடுதலை புலிகள் கொன்றது மன்னிக்க முடியாதது என ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார் கருணாநிதி. அவர் முதல்வராக இருந்தபோது ஆக்கப்பூர்வமாகவே செயல்பட்டார்.
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது கூட அவரால் முடிந்த அளவு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார். அப்போது கூட அவர் விடுதலை புலிகளை நேரடியாக ஆதரிக்கவில்லை. இறுதிக்கட்ட போருக்கு பிறகு கருணாநிதி மீதே வசவுகள் விழுந்தன”.
”இலங்கை விஷயத்தை பொருத்தவரையில், அவருடன் நான் பலமுறை பேசியிருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன் அவர் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கொண்டவர். அவர் வெளியில் ஈழத்துக்கு தீவிர ஆதரவு தருவதுபோல சொல்லி வந்தாலும் அவருடைய நிலை என்னவெனில், இலங்கைக்குள் தமிழர்கள் தங்களது அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும். தங்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் நிலை உருவாக வேண்டும். வேறு வழியில்லையென்றால், ஈழம் மலர வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. சிலர் பிடிவாதவே தமிழ் ஈழம் மட்டுமே வேண்டும் எனச் சொல்வது போன்றதோர் நிலை எடுப்பவராக அவர் இருந்ததில்லை.”
“இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி மேற்கொள்ளும் வாய்ப்பு அமைய வேண்டும் என்பதே அவரது உண்மையான கோரிக்கையாக இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என தெரியும்போது தமிழீழம் தான் ஒரே தீர்வு என்ற வெளிப்படையான நிலையை எடுக்கும்போது அவர் பிடிவாதமாகவோ திடமாகவோ அம்முடிவை எடுக்கவில்லை என்பதை நான் நன்றாகவே அறிவேன். அவர் விடுதலை புலிகளின் அட்டூழியங்களை ஆதரிக்கவில்லை”.
”ஒருமுறை நான் அவரிடம் பேசும்போது, ‘ஒரு முட்டாள்தனமான தவறு, குற்றத்தை விட மோசமானது’ என ஒருவரின் மேற்கோளை காட்டி ராஜிவ் காந்தி கொலை குறித்து சொல்லிக்கொண்டிருந்தேன். விடுதலை புலிகளின் முட்டாள்தனமான தவறுகள் குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஒன்று, இந்திய அமைதி காப்புப் படையுடன் விடுதலை புலிகள் வெறித்தனமாக போர் நடத்தியது. இரண்டு, ராஜீவ் காந்தி படுகொலையை கட்டாயமாக பிரபாகரனே திட்டமிட்டது. அது ஒரு மிகப்பெரிய குற்றம். மேலும் முட்டாள்தனமான தவறு” என்றேன்.
”மூன்றாவதாக, ராஜபக்சவைத் தேர்ந்தெடுத்தது என்றேன்”. எப்படி? என கேட்டார்.
”ரணில் விக்ரமசிங்க Vs ராஜபக்சே மோதிய அந்த அதிபர் தேர்தல் கடும் போட்டி நிறைந்ததாக இருந்திருக்கும். ஆனால் தேர்தலை புறக்கணிக்கச் சொல்லி தமிழர்களிடம் கூறியது விடுதலை புலிகள். இதனால் கணிசமாக ரணிலுக்கு கிடைக்க வேண்டிய ஆதரவு வீணாய்ப்போனது என்றேன்.”
”அவர்கள் இன்னொரு தவறு செய்தார்கள் அது என்ன தெரியுமா?” என்று கருணாநிதி என்னிடம் கேட்டார்.
”சிறீ சபாரத்தினம் என்னுடைய சகோதரர் மாதிரியானவர். அவரை கைது செய்து கொல்லப்போகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். அதைச் செய்யக்கூடாது என நான் சொல்வதாய் பிரபாகரனிடம் சொல்லுங்கள் என பேபி சுப்ரமணியத்திடம் பேசினேன். ஆனால் சபாரத்தினத்தை சித்திரவதை செய்து படுகொலை செய்தனர். இதனால் விடுதலைபுலிகள் மீது பெரும் ஏமாற்றம் உண்டானது.” என்று சொல்லி கருணாநிதி என்னிடம் கவலைப்பட்டார்.
”ஆகவே கருணாநிதிக்கு கண்மூடித்தனமான விடுதலை புலிகள் ஆதரவு நிலை இருந்ததில்லை. அதே நேரத்தில் விடுதலை புலிகள் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து அவர் குழப்பிக்கொள்ளவில்லை.”
”ஈழத்தமிழர் நலன், உரிமைகள் மற்றும் அவர்களது அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் ஆகியவற்றை காப்பதுதான் கருணாநிதியின் நோக்கம்”.
”ஈழத்தமிழர்கள் குறித்து நாங்கள்தான் ஒரே பிரதிநிதிகள் என விடுதலை புலிகள் எடுத்த நிலையை அவர் ஒப்புக்கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.”
”இலங்கையில் இறுதிக் கட்ட போரில் யாரும் விடுதலை புலிகளையும் பிரபாகரனையும் காப்பாற்ற முடியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், பிரபாகரன் அசட்டையாக ஓர் நிலையை எடுத்துவிட்டார்.””அந்த நேரத்தில் பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது என்பதே உண்மை. அந்நேரத்தில் இந்தியா தலையிடும் என பிரபாகரனுக்கு யாரோ நம்பிக்கை அளித்ததாக கேள்விப்பட்டோம். ஆனால் ஆதாரமில்லை. இந்த நிலையில், திமுகவால் மட்டும் காப்பாற்றியிருக்க முடியுமா என்ற கேள்வியே தேவையற்றது.”