பிரபாகரனின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டியது; முன்பிணை கோரி எம்.கே.சிவாஜிலிங்கம் மனுத்தாக்கல்
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியது தொடர்பில் தான் எந்நேரமும் கைது செய்யப்படும் நிலைமை உள்ளமையால், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன்றில் முன் பிணை கோரிய வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு, வல்வெட்டித்துறையில் உள்ள வே. பிரபாகரனின் பூர்வீக வீடிருந்த காணியில், சிவாஜிலிங்கம் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.
அன்றைய தினம் சிவாஜிலிங்கம் கேக் வெட்டுவதற்கு முன்பாக காவற்துறையினர் கேக்கினை பறிமுதல் செய்திருந்ததுடன் சிவாஜிலிங்கத்தையும் , அவரது ஆதரவாளர்களையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணைகளின் பின்னர் விடுவித்தனர். அதன் பின்னரும் அவர்கள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் கடந்த மாதம் வல்வெட்டித்துறை காவற்துறையினர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். அது தொடர்பிலான வழக்கு விசாரணை கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் தன்னை காவற்துறையினர் எந்நேரமும் கைது செய்யக்கூடிய நிலைமை உள்ளமையால், தனக்கு முன் பிணை வழங்க வேண்டும் என சிவாஜிலிங்கம் தனது சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் விண்ணப்பம் செய்தார்.
முன் பிணை வழங்குவது தொடர்பிலான விசாரணைகள் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், அன்றைய தினம் மன்றில் சிவாஜிலிங்கத்தையும் முன்னிலையாக பணித்தார்ன். அதன் பிரகாரம் கடந்த 07ஆம் திகதி வழக்கு விசாரணை நடைபெற்றது.
அதன் போது சிவாஜிலிங்கம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், முன் பிணையை தாம் கோருவதற்கான காரணத்தையும் , அதனை வழங்க வேண்டிய அவசியத்தையும் மன்றில் எடுத்துரைத்தனர். அதனை ஆராய்ந்த மன்று , முன் பிணை தொடர்பில் எதிர்வரும் 28ஆம் திகதி எழுத்து மூல விண்ணப்பத்தினை மன்றில் சமர்ப்பிக்குமாறு சட்டத்தரணிகளுக்கு மன்று பணித்தது.