மறைந்தது இசைக்குயில்..பிரபல பின்னணி பாடகி இசையரசி வாணி ஜெயராம் காலமானார்
பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம். அண்மையில் குடியரசு தினவிழாவையொட்டி அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அவர் காலமானார். 78 வயதான வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வாணி ஜெயராம் படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இசைக் குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம், ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டு பாலிவுட்டில் பாடகியாக அறிமுகமானவர். பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ள இவர், பல்வேறு மொழிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். வாணி ஜெயராம்: 1971-ம் வருடப் புத்தாண்டு தினத்தில் வெளிவந்த ‘குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசை அமைப்பில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘மியான் மல்ஹார்’ ராகப் பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.
வாணி ஜெயராமின் குரல் அறிமுகமும் அந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான ஜெயா பாதூரியின் (பின்னாளில் அமிதாப் பச்சனின் மனைவி ஆனார்) குடும்பப் பாங்கான தோற்றமும் இணைந்து பெரும் மாயத்தை செய்ய ரசிகர்கள் கிறங்கிப் போனார்கள்.
அறிமுகப் பாடலே அபார வரவேற்பைப் பெற்றது. அந்த ஒரு பாடலே வாணி ஜெயராமை முன்னணிப் பாடகியரின் வரிசையில் இடம்பெறச் செய்தது. அதன்பின் ஒரு தமிழ்க் குரல் இந்தியில் கொண்டாடப்படும்போது தமிழில் தவறவிடுவார்களா? அதுவும் திரைப் பாடல்கள் அனைத்தும் கவிதைகளுக்கு இணையான இடத்தில் உயர்ந்து நின்ற இசைப் பொற்காலத்தில், அவை வாணி ஜெயராமின் குரலில், இனிமை கூடி ஒலிக்கும்போது கொண்டாடாமல் இருப்பார்களா?
இன்று ரசிகர்களால் ‘வாணி அம்மா’ என்று அழைக்கப்படும் அவரது திரையிசைப் பயணம் எழுதி முடிக்க முடியாத சாதனைகளை உள்ளடக்கியது. ஏனெனில் அவர் பாடாத இந்திய மொழியே இல்லை எனும் அளவுக்குச் சாதனைகள் படைத்திருக்கிறார். மதங்களைக் கடந்து பக்திப் பாடல்களையும் தனி ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்.
தெய்விகத் தன்மையும் சங்கதிகளும்: ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’, ‘மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க’, ‘முத்தமிழில் பாடவந்தேன்’ என அவர் பாடிய எந்தப் பாடலை எடுத்துக்கொண்டாலும் அதில் நயமும் இனிமையும் கைகோத்துக்கொண்டிருக்கும். இவற்றுக்கெல்லாம் அடிநாதமாக ஒரு தெய்விகத் தன்மை குரலில் இழைந்தோடும். வாணி பாடும் சிறப்பம்சமே பாடல்களின் இடையில் அவர் வெளிப்படுத்தும் சங்கதிகள் தான். “இந்த இடத்தில் இந்த சங்கதி போடவேண்டும்” என்று தீர்மானித்துக்கொண்டு அவர் பாடமாட்டார். அவர் பாடிக்கொண்டே போவார். சங்கதிகள் தாமாகவே வந்து விழுந்துகொண்டே இருக்கும்.
‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ ‘சங்கராபரணம்’ படத்தில் இடம்பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’, ‘ஸ்ருதிலயாலு’ தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ ஆகிய பாடல்களுக்காக மூன்று முறை அகில இந்திய சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றவர்.
‘புனித அந்தோனியார்’ படத்தில் ‘மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்’, பி. சுசீலாவுடன் இணைந்து ‘பாத பூஜை’ படத்தில் ‘கண்ணாடி அம்மா உன் இதயம்’, ‘அந்தமான் காதலி’யில் ‘நினைவாலே சிலை செய்து’, ‘சினிமாப் பைத்தியம்’ படத்தில் ‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை’, ‘தங்கப்பதக்க’த்தில் ‘தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு, ‘பாலாபிஷேக’த்தில் ‘ஆலமரத்துக் கிளி’ எனக் கேட்டதுமே இதயத்துள் ஈரம் படச் செய்யும் குரலினிமையுடன் அவர் பாடிய பாடல்களின் பட்டியல் மிகப் பெரிது.
உணர்வு நிலைகளின் ஊர்வலம்: குரலினிமைக்கு மட்டுமல்ல; கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளைத் தனது குரலை மாற்றாமலேயே கொண்டுவந்துவிடும் திறமை கைவரப் பெற்றிருந்தார். ஒரு பெண்ணின் விரக தாபத்தை வெளிப்படுத்தும் பாடல்களாக ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘என்னுள்ளே ஏதோ’, ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தில் இடம்பெற்ற ‘நானே நானா’, ‘சிறை’ படத்தில் ‘நான் பாடிக்கொண்டே இருப்பேன்’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அதேபோல் காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்ணின் ஆற்றாமையைக்
குரலில் சித்தரிக்கும் ‘சவால்’ படத்தின் ‘நாடினேன்.. நம்பினேன்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் ‘கட்டிக் கரும்பே கண்ணா’, ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில் ‘ஒருபுறம் வேடன். மறுபுறம் நாகம்’, ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ‘மணமகளே உன் மணவறைக் கோலம்’ ஆகிய பாடல்களை எடுத்துக்காட்டலாம்.
தாய்மை அடைந்த பெண்ணின் பல்வேறு உணர்வு நிலைகளை வெளிப்படுத்தியதில் ‘திக்கற்ற பார்வதி’யின் ‘ஆகாயம் மழை பொழிஞ்சா’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தின் ‘மலர்போல் சிரிப்பது பதினாறு’ ‘சாவித்திரி’ படத்தில் ‘வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்’ ஆகிய பாடல்கள் சிறந்த உதாரணங்கள்.
மாற்று இல்லாத பாடகர்! – கடலில் அசைந்தாடும் படகைப் போல உள்ளத்தை அசைக்கும் வாணி ஜெயராமின் பல பாடல்கள் ஒன்று ‘மீனவ நண்பன்’ படத்தில் இடம்பெற்ற ‘பொங்கும் கடலோசை’. ‘அவன்தான் மனிதன்’ படத்தில் இடம்பெற்ற ‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது’ சரணங்களில் ஏற்ற இறக்கங்களுடன் ஜாலம் புரியும் பாடல். காதலர்களின் தேசிய கீதமாக நீண்ட காலம் ஒலித்த ‘ஒரே நாள் உனை நான்’ என்ற ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படப் பாடலில் காதல் வழிந்தோடுவதைக் கேட்கமுடியும். இவருக்கு மாற்று யாருமில்லை என்று எண்ணத்தக்க வகையில் எல்லாப் பாடல்களிலும் அவர் வெளிப்படுத்தும் சஞ்சாரங்கள் பிரமிக்க வைப்பவை.
கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் (19) பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். எந்த மொழியில் பாடினாலும் அவரது உச்சரிப்பு துல்லியமாக இருக்கும். “எல்லா மொழிகளிலும் அவற்றினுடைய த்வனி தவறாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஒரு ஆயுட்கால பாடகியே” – என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர்.