பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார்
பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன் (79). சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் என்ற திரைப்படம் தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இவர் ரஜினியை வைத்து முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, ரஜினியின் பேட்ட, விஜய்சேதுபதியின் சீதக்காதி, அதர்வாவின் பூமராங் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகேந்திரனின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.