பிரபல கால்பந்து நட்சத்திரத்திற்கு திருமணம்; துருக்கி ஜனாதிபதி துணை மாப்பிள்ளை!
ஜேர்மனி கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மெசூட் ஓசில், கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் துருக்கி அழகியை திருமணம் செய்துகொண்டார்.
துருக்கி நாட்டை பூர்வீகமாக கொண்ட கால்பந்து வீரர் மெசூட் ஓசில், ஜேர்மனியின் கால்பந்து அணியில் விளையாடி வந்தார். ஜேர்மனி அணிக்காக 92 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஓசில் 23 கோல்கள் அடித்துள்ளார்.
30 வயதாகும் ஓசில் கடந்த ஆண்டு நிறவெறி சர்ச்சைக்கு ஆளானார். துருக்கி ஜனாதிபதி எர்டோகனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமே இந்த பிரச்சனைக்கு ஆரம்பமாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து, ஜேர்மனியின் தேசிய கால்பந்து அணியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்த ஓசில், ‘வெற்றி பெற்றால் நான் ஜேர்மன், தோல்வியடைந்தால் புலம்பெயர்ந்தவன்’ என்று கூறப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் துருக்கி அழகியான Amine Gulse-ஐ தான் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும், துருக்கி ஜனாதிபதி திருமணத்தின்போது துணை மாப்பிள்ளையாக இருப்பார் என்றும் அறிவித்தார்.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஓசிலுக்கும், அமினே குல்ஸுக்கும் திருமணம் நடந்தது. அதில் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் துணை மாப்பிள்ளையாக கலந்து கொண்டார். அவரது மனைவியும் அவருடன் திருமணத்திற்கு வந்திருந்தார். இவர்களது திருமணம் இஸ்தான்புல்லில் உள்ள ஆடம்பர ஓட்டலில் நடைபெற்றது.