Main Menu

பிரதமர் மோடி – பிரேசில் அதிபர் பேச்சுவார்த்தை…

டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் பிரேசில் அதிபர் போல்ஸ்நாரோ முன்னிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

டெல்லியில் நாளை நடைபெற உள்ள குடியரசு தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்துள்ள பிரேசில் அதிபர் ஜெர் மெசையா போல்ஸ்நாரோவுடன் அந்நாட்டு உயர்நிலைக் குழுவினரும் வந்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மோடியும் பிரேசில் அதிபரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து சைபர் பாதுகாப்பு, உயிரி எரிசக்தி, சுகாதாரம், மருந்து தயாரிப்பு உள்ளிட்ட பல துறைகளில் இரு நாட்டு கூட்டுறவை வளர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த பிரேசில் அதிபரை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் தமக்கு அளிக்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரேசில் அதிபர் ஏற்றுக்கொண்டார்.

இன்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரேசில் அதிபர் ஜெர் மெசையா போல்ஸ்நாரோ மரியாதை செலுத்தினார்.

டெல்லியில் இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், அங்கு பேசிய பிரதமர் மோடி, அதிபர் ஜெர் மெசையாஸ் போல்சோநாரோவின் (Jair Messias Bolsonaro)  இந்திய வருகை இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தை துவக்கி உள்ளதாக வர்ணித்தார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பிரேசிலுக்கு மிக முக்கிய இடம் உள்ளதாக கூறிய அவர், பல்வேறு சர்வதேச விவகாரங்களில் இந்தியாவும் பிரேசிலும் ஒரே கருத்தைக் கொண்டிருப்பதாகவும் சிலாகித்தார்.