பிரதமருக்கு மாலைதீவு அரசாங்கம் பாராட்டு
இலங்கையின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய தொலைநோக்குடன் கூடிய தலைமைத்துவப் பணியை மாலைதீவு அரசாங்கம் பாராட்டியுள்ளது.
ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் ஷோலிஹ் (Ibrahim Mohamed Solih) தலைமையிலான மாலைதீவு மக்களின் நட்புறவும், பிணைப்பும் இலங்கை மக்களுக்கு என்றுமே உண்டு என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் தெரிவித்துள்ளார். நேற்று அலரி மாளிகையில் இலங்கைப் பிரதமரைச் சந்தித்த போது அவர் கருத்து வெளியிட்டார்.
உலகம் முழுவதிலும் பூகோள எல்லைகளையும், மதப் போதனைகளையும் பொருட்படுத்தாமல் சர்வதேச பயங்கரவாதம் பரவியுள்ளது. இத்தகைய பின்புலத்தில் இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வது அவசியம் என மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழித்துக் கட்டுவதற்கு சர்வதேச சமூகம் ஒற்றுமையாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.