Main Menu

பிக் பேஷ் ரி-20 தொடர்: சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி!

பிக் பேஷ் ரி-20 தொடரின் 48ஆவது லீக் போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஜேம்ஸ் பெட்டின்சன் ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களையும், ஏபி டிவில்லியர்ஸ் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் பந்துவீச்சில், ஜெக்ஸன் பேர்ட், டொம் கர்ரன் மற்றும் பென் டிவார்சுயீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஸ்டீவ் ஓகீப் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 127 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி, 15.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஜோஷ் பிலீப்பே ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும், ஜேம்ஸ் வின்ஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பிரிஸ்பேன் ஹீட் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் பெட்டின்சன் மற்றும் பென் லாப்லீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, சிட்னி சிக்ஸர்ஸ் அணி சார்பில் 1 விக்கெட்டினை வீழ்த்திய ஸ்டீவ் ஓகீப் தெரிவு செய்யப்பட்டார்.