பிக் பாஷ் கிரிக்கெட்: லீக் போட்டிகளில் பெர்த் ஸ்கார்சர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் வெற்றி

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி  தொடங்கியது. நேற்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. முதல் லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் – பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் சிட்னி மைதானத்தில் மோதின.

டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 18.4 ஓவரில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிட்னி அணியில் நிக் மேடின்சன் 31 ரன்களும், ஸ்வீவ் ஓ கீஃப், சீன் அபோட் ஆகியோர் தலா 23 ரன்களும் எடுத்தனர். பெர்த் அணி தரப்பில் அண்ட்ரூ டை 4 விக்கெட்களும், மிச்செல் ஜான்சன், ஜை ரிச்சர்ட்சன், டேவிட் வில்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களும் கைப்பற்றினர்.

பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி களமிறங்கியது. பெர்த அணி 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஷ்டன் டர்னர் அதிரடியாக விளையாடி 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சிட்னி அணியின் சீன் அபோட் 3 விக்கெட் வீழ்த்தினார். பெர்த் அணியின் ஆஷ்டன் டர்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து மெர்போர்னில் நடந்த லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் – மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பிரிஸ்பேன் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அலெக்ஸ் ராஸ் 48 ரன்கள் எடுத்தார். மெல்போர்ன் அணி பந்துவீச்சில் ஜாக் வில்டர்மத் 3 விக்கெட்களும், பிராட் ஹாக், வெய்ன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்ச் 8 ரன்களிலும், மார்கஸ் ஹாரிஸ் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேமரான் ஒயிட்டும், டாம் கூப்பரும் நிதானமாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தனர். மெல்போர்ன் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேமரான் ஒயிட் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். டாம் கூப்பர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார். மெல்போர்ன் அணியின் ஜாக் வில்டர்மத் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வருகிற 26-ம் தேதி நடைபெற உள்ள லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்சர்ஸ் – மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !