பாலஸ்தீன பெண்ணின் கைக்குழந்தைக்கு யூத பெண் பாலூட்டிய சம்பவம்!

இஸ்ரேல் நாட்டில் உள்ள இன் கரீம் என்னும் பகுதியில் பாலஸ்தீன பெண் ஒருவர் குடும்பத்துடன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் பாலஸ்தீன பெண் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.  அவரின் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர்களின் பச்சிளங் குழந்தை சிறிய காயங்களுடன் உயிர்தப்பியது.

படுகாயமடைந்த பெண் ஹதாஸ் எலின் கிரீம் என்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் குழந்தையை அந்த மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் உலா என்பவரிடம்  ஒப்படைத்துள்ளனர். பச்சிளங்குழந்தை என்பதால் பசி தாங்காமல் அழத் தொடங்கிவிட்டது. குழந்தையின் தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் அவரால் தாய்பால் கொடுக்க முடியாத சூழல். பசியில் துடிக்கும் குழந்தைக்கு உலா புட்டிப் பால் கொடுக்க முயன்றுள்ளார். ஆனால் குழந்தை குடிக்க மறுத்துவிட்டதால், அவரே அந்த குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். இந்த காட்சியைப் பார்த்த குழந்தையின் உறவினர்கள் கண்கலங்கி உலாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் யூத இனத்தவரான உலா, பாலஸ்தீன பெண்ணின் குழந்தைக்கு பாலூட்டிய சம்பவம் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அவரின் புகைப்படத்தைப் பகிர்ந்து நெட்டிசன்ஸ் பாராட்டி வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !