“ பாலன் பிறப்பு “
பாலன் பிறப்பு பாரினில் சிறப்பு
மார்கழித் திங்கள் இருபத்தைந்தில்
மதிநிறைந்த நன்னாளில்
மண்ணுலகை மீட்பதற்காய்
மனுக்குலத்தைக் காப்பதற்காய்
மன்னுயிர்களை இரட்சிப்பதற்காய்
மண்ணிலே உதிக்கிறாரே
மீண்டும் பாலன் இயேசுவாய் !
மாட மாளிகையில் பிறக்கவில்லை
மாணிக்க தொட்டிலிலும் தவழவில்லை
மார்கழி மாதக் கடுங்குளிரில்
மாட்சிமை மிக்க பாலனவன்
மாட்டுத் தொழுவத்தில் பிறந்தாரே !
கன்னிமரியாள் பெற்றெடுத்த காருண்ணியம்
காசினியில் காலடி பதித்த புனிதநாள்
பாவிகளை மீட்கவே
பாலன் இயேசு பிறந்தநாள்
பாவம் எல்லாம் தொலைந்தநாள்
மனிதநேயம் மலர்ந்தநாள்
மகிமை யாவும் கிடைத்தநாள் !
அமைதியைப் போதிக்க
அன்பை நிலைநாட்ட
அவனியிலே இறைமகன்
அவதரித்த திருநாள்
அற்புதப் பெருநாள்
ஆனந்தத் திருநாள் !
மக்களின் துன்ப துயரங்களைப் போக்க
மக்களுக்கு மன்னிப்பை அருள
மக்களை மகிழ்ச்சிப்படுத்த
மனிதர்களைப் புனிதர்களாக்க
மண்ணில் உதித்தாரே யேசுபாலன்
மகிழ்வோடு வாழ்த்திடுவோம் !
கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)