பாரிஸ் வாகன கண்காட்சியில் தனித்துவம் பெற்ற மின்சார கார்கள்!

பாரிஸ் வாகன கண்காட்சி களைகட்டத் தொடக்கியுள்ள நிலையில், வாகன தயாரிப்பாளர்கள் தமது மின்சார பாவனை கார்களை வௌியிட்டு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் செய்தி ​சேகரிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டதோடு, அங்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விளங்கங்களை பெறக்கூடியதாக இருந்தது.

தி செலோன் டி ஒட்டோமொபைல் என்ற இக்கண்காட்சியானது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறுவதுடன், அதிகளவானோரின் அபிமானம் பெற்ற வாகன கண்காட்சியாகவும் திகழ்கின்றது.

இங்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

கலப்பு சக்திப் பயன்பாட்டு கார்கள் போன்றே மின்கலங்களில் இயங்கும் கார்கள் இந்த ஐரோப்பிய வாகன கண்காட்சியில் அதிக இடத்தை பிடித்துள்ளன.

இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாகனங்களின் பொருட்டு, வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை முகவர்கள் பல பில்லியன் கணக்கான முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது அந்த வாகனங்களை சிறந்த லாபத்துடன் விற்பனை செய்ய வேண்டிய முக்கிய தருணத்தை எட்டியுள்ளனர்.

மின்கலங்களால் இயங்கும் மாதிரிகளைக் கொண்ட கார்கள் இந்த வாரம் பாரிஸ் கார் ஷோவில் முக்கிய இடம் பிடிக்கின்றன. BMW, Mercedes Benz, Renault, Ferrari, Lamborghini, Jaguar, Alphine, PSA உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் கார்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

முழுமையாக, மின்னாற்றலில் இயங்கும் suv வகை காரான EQC காரை, Mercedes Benz நிறுவனம் அறிமுகம் செய்து காட்சிப்படுத்தியது.

இதேபோன்று, BMW நிறுவனத்தின் X5, Renault நிறுவனத்தின் K-ZE, PSA நிறுவனத்தின் DS3 கார்கள் மற்றும் Ferrari, Lamborghini, Jaguar, Alphine ஆகிய நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

புவி வெப்பமயமாதலை கருத்திற்கொண்டு, மின்சார கார்கள் பயன்பாட்டிற்கு உலக நாடுகள் பலவும் முக்கியத்துவம் வழங்கி வருவதை பாரிஸ் வாகன விற்பனை கண்காட்சியில் அணிவகுத்துள்ள மின்சார கார்கள் பறைசாற்றி வருகின்றன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !