பாரிஸ் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேர்! நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

நேற்று பாரிசில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2,000 பேர் கலந்துகொண்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மஞ்சள் ஆடை போராட்டக்காரர்கள் நேற்றைய தினம் பாரிஸ் நகரம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை சமூக ஊடகங்கள் மூலமாக ஒருங்கமைத்ததாக Eric Drouet என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தான் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் என்று கூறப்படுகிறது. மேலும் இவருடன் சேர்த்து 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் Catalan மக்களில் பலர் பிரெஞ்சு-ஸ்பெயின் எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் சோம்ப்ஸ்-எலிசேயிலும் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிசார் கண்ணீர் புகை சூடு மற்றும் தண்ணீரை பீச்சி அடிப்பது உள்ளிட்டவற்றை போராட்டக்காரர்கள் மீது நடத்தினர்.

இதேபோல் நாடு முழுவதும், சுமார் 31 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !