பாராளுமன்ற மோதல் – வாக்குமூலங்கள் பதிவு

பாராளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் உலகளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், இம் மோதல் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
தமக்குள் மோதியதுடன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்பொருட்டு விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

இதேவேளை இம் மோதலின்போது காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர்களின் மருத்துவ அறிக்கைகளையும் பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறை தலைமையகம் இதுவரையில் காவல்துறை உத்தியோகத்தர்கள் ஐவரின் மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவானவர்கள் நேற்று முந்தினம் சபாநாயகரின் அக்ராசனத்தை முற்றுகையிட்டிருந்ததுடன் சபாநாயகரின் பாதுகாப்புக்காக பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்த காவல்துறையினர்; மீதும் தாக்குதல்களை நடாத்தியிருந்தனர்.

இந்த தாக்குதல்களினால் 16 காவல்துறை உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தனர். இதுதவிர, மஹிந்த தரப்பினர் மிளகாய்த்தூள் கலந்த நீர் பிரயோகங்களையும் மேற்கொண்டிருந்தனர். இம் மோதல் காரணமாக காவல்துறையினர் மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மலிக் சமரவிக்கிரம மற்றும் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !