பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியும்: அமைச்சர் ஐ.பெரியசாமி
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:- மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவர் பொறுப்பை ஏற்ற பின்னர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி மட்டும் வெற்றி என்ற நிலையை மாற்றி, ஆளுங்கட்சியாக அ.தி.மு.க. இருந்தபோதும் வெற்றி பெற்றோம். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரான பின்னரும் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். எனவே 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். இப்படி அவர்கள் (எதிர்க்கட்சிகள்) வெற்றி பெற்று இருக்கிறார்களா?. இந்த வெற்றி இதோடு நிற்காது. இப்போது ஒவ்வொரு அமைச்சரின் செயலையும், சிந்தனையையும் நான் பார்த்துகொண்டிருக்கிறேன். தனது பொன்னான நேரத்தை வீணடிக்காமல் உழைத்துகொண்டிருக்கின்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்க்கிற போது, எல்லோருக்கும் உற்சாகம் வந்துவிட்டது. இப்போது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்துவிட்டால் அவ்வளவுதான் என்கிறார்கள். இந்த கட்சி சேர்ந்தால் அவ்வளவுதான், அந்த கட்சி சேர்ந்தால் அவ்வளவுதான் என்று சொல்கிறார்கள். வரப்போகிற பாராளுமன்ற தேர்தலில் எல்லா கட்சிகளும் சேர்ந்தாலும் தி.மு.க. தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இதை நான் ஏதோ மேடை பேச்சுக்காக சொல்லவில்லை. நான் உறுதியாக சொல்கிறேன் 20 ஆண்டு காலம் தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின்தான் இருக்க வேண்டும் என்பதை மக்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு ஐ.பெரியசாமி தெரிவித்தார்.