பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கு கொள்ளுமாறு எதிர்க்கட்சிக்கு அழைப்பு
ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கு கொள்ளுமாறு எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்தார். இதுவரை அந்த தெரிவுக் குழு தொடர்பில் நிலவிய முரண்பாடுகள் தற்சமயம் களையப்பட்டுள்ளன.
ஆகவே எதிர்கட்சிகள் அந்த தெரிவுக்குழுவில் இணைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, கடந்த அரசாங்கம் சஹ்ரான் உள்ளிட்ட 30 பேருக்கு நிதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்டுள்ள விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு புலனாய்வு அதிகாரிகளை அழைத்து அவர்களை பலிகடாவாக்காதீர்கள் எனக் குறிப்பிட்டார்.
தெரிவுக்குழுவில் கதைப்பதை பகிரங்கப்படுத்துவது புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.