பாரதிய ஜனதா கூட்டணி 306 ஆசனங்களுடன் முன்னிலை
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்திய பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் பிரதமர் மோடி தலைமயிலான பாரதிய ஜனதா கூட்டணி 306 ஆசனங்களுடன் முன்னிலையில் உள்ளது.
17 ஆவது இந்திய மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல் இந்த மாதம் 19ஆம் திகதிவரை 7 கட்டங்களாக இடம்பெற்றது. இந்த நிலையில், தேர்தலில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று இடம்பெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் வன்முறைகள் ஏற்படுவதற்கான அச்ச நிலைமை உள்ளதாக மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 543 ஆசனங்களைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத் தொகுதிகளில் வேலூரை தவிர்த்து ஏனைய 542 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்திய நாடாளுமன்றத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமாயின், ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ 271 ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும். கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி 282 ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்தது.
காங்கிரஸ் கட்சி 44 ஆசனங்களை மாத்திரமே பெற்றிருந்தது.