பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி கொண்டு வரப்பட்டமை ஜனநாயகத்தை பாதிக்கும் செயல் என குற்றச்சாட்டு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமை ஜனநாயகத்தை பாதிக்கும் செயல் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையை வண்மையாக கண்டிப்பதாகவும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடக இயக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளது.
விசேடமாக தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெறும் சந்தர்ப்பமொன்றில், இவ்வாறான செயற்பாடு நிலைமையை மிக மோசமாக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதிக்கான அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்துவதில்லை என உறுதிமொழியளித்து பதவியேற்ற நல்லாடசி ஜனாதிபதியொருவரின் கீழ் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது தொடர்பாக கவலையடைவதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் வேண்டியதோர் விடயத்தை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவருவதற்கு உள்ள உரிமையை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாக விளங்கும் இந்த தீர்மானம், தற்போதைய அரசியல் சூழ்நிலையோடு வைத்து நோக்கப்பட வேண்டுமென்று சுதந்திர ஊடக இயக்கம் கருதுவதாக குறிப்பிட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், வெகுசன ஊடகங்கள் சமூகப் பொறுப்புமிக்க விதத்தில் செயற்படுவதை உறுதி செய்வது தேர்தல் ஆணையாளருக்கு உள்ள விசேட பொறுப்பு என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் கீழ் உள்ள ஒரு விடயம் அத்தகைய ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு உட்பட்டதா? என்பது கேட்கப்பட வேண்டிய சட்டப் பிரச்சினையாகும் என்றும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தவுள்ளதாக தற்போதளவில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்பவும் ஜனாதிபதியின் பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை கொண்டுவருவது விவாதத்திற்குரியதாகும் என்றும் சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.