பாஜக தேர்தல் அறிக்கை: விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என உத்தரவாதம்
பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் இன்று டெல்லியில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
“ஐந்து வருடங்களில் நரேந்திர மோதி தலைமையிலான அரசு 50 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.” என்று தெரிவித்தார் அமித் ஷா.
பாஜக தேர்தல் அறிக்கையில் சில முக்கிய அம்சங்கள்
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும், முத்தலாக்கிற்கு எதிரான சட்டம் கொண்டுவந்து முஸ்லிம் பெண்களுக்கான நீதி உறுதி செய்யப்படும் ஆகிய சில வாக்குறுதிகள் அதில் இடம் பெற்றுள்ளன.
அந்த அறிக்கையில் இருந்த பிற முக்கிய அம்சங்கள்:
- பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின்படி விவசாயிகளுக்கு அதிகப்படியான வருமானம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
- வட்டியில்லாமல் ஒரு லட்சம் வரை விவசாயிகளுக்கு குறுகிய காலக் கடன் வழங்கப்படும்.
- அனைத்து குடும்பங்களுக்கும் வீடு கிடைக்குமாறு செய்யப்படும்.
- 100% அனைத்து வீடுகளுக்கும் மின் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
- அனைவருக்கும் வங்கி கணக்கு இருப்பது உறுதி செய்யப்படும்
- ஒவ்வொரு குடும்பங்களிலிலும் கழிப்பிடங்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.
- வர்த்தகம் செய்ய ஏதுவான நாடாக இருக்கும் பட்டியலில் இந்தியாவை மேலும் முன்னேற்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
- இந்தியா முழுவதும் ஸ்மார்ட் ரயில்வே நிலையங்கள் உருவாக்கப்படும்.
- ஒவ்வொரு தனி நபருக்கும் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வங்கி சேவைகளை அணுகும் வசதி செய்து தரப்படும்.
- நீதிமன்றங்கள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் நீதிமன்றங்கள் நவீனமயமாக்கப்படும்.
- டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிக்கப்படும்
- காற்று மாசை குறைப்பதற்கான பணி மேற்கொள்ளப்படும்.
- சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் தொடங்கப்படும்.
- கிராமப்புறங்களில் ஏழ்மையான வீடுகளுக்கும் எல்பிஜி தொடர்பு கிடைப்பது உறுதி செய்யப்படும்.
- வரி விகிதங்கள் குறைக்கப்படும் மற்றும் அதிகப்படியான வரி வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.