பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் ‘டிராவல் வித் ஜோ’ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பிரபலமான இடங்கள் குறித்து இவரது யூடியூப் சேனலில் தகவல்களைப் பகிர்வதால் சமூக வலைதளத்தில் புகழ்பெற்றுள்ளார் ஜோதி மல்ஹோத்ரா.
இந்நிலையில் ஜோதி மல்ஹோத்ரா, குசாலா, யமீன், தேவிந்தர், அர்மான் உட்பட 6 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு தகவல்களை உளவு சொன்னதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
ஜோதி மல்ஹோத்ரா கடந்த 2023-ம் ஆண்டு கமிஷன் ஏஜெண்ட் மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். இவருக்கு டெல்லியில் அமைந்து உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் டேனிஸ் எனப்படும் எஹ்சான்-உர்-ரஹீம் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் பல பாகிஸ்தான் உளவுத்துறை நிறுவனங்களை, ஜோதிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும், ஜோதியும், டேனிஸும் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளனர். அடிக்கடி வீடியோ கால்கள் மூலமாகவும் பேசி வந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட செல்போன் செயலிகள் பாகிஸ்தானியருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார் ஜோதி. இந்திய பகுதிகள் குறித்த ரகசியங்களை அவர்களுக்கு பகிர்ந்து வந்ததுடன், சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர்.
மேலும், பாகிஸ்தானுக்கு முகவர்களாகவும், ரகசியங்களை கொடுப்பவர்களாகவும், நிதி பரிமாற்றம் செய்பவர்களாகவும் இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். இதைத் தொடர்ந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோதி மல்ஹோத்ரா உள்ளிட்ட 6 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலி, இந்தோனேசியா: கைது செய்யப்பட்டுள்ள ஜோதி, பாலி, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். அங்கிருந்தவாறு பல்வேறு பாகிஸ்தான் உளவாளிகளுக்கு(பிஐஓ) தகவல்களைக் கொடுத்து வந்துள்ளார். பாகிஸ்தான் உளவாளிகளுடன் நெருங்கிப் பழகி பல்வேறு ராணுவத் தகவல்களைக் கொடுத்து வந்துள்ளார். இதற்காக ஏராளமான பணத்தையும் அவர் பெற்றுள்ளார்.
ஹரியானா மாணவர் கைது: இதனிடையே, பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல்களைக் கொடுத்து வந்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த மாணவர் தேவேந்திர சிங் தில்லான் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 வயதான தேவேந்திர சிங் தில்லான், பாட்டியாலாவில் உள்ள கல்சா கல்லூரியில் அரசியல் அறிவியல் படித்து வருகிறார். இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் துப்பாக்கி உள்ளிட்ட புகைப்படங்களை பதிவிட்டதற்காகக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், கர்தார்புர் வழியாக அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் சென்று வந்ததும், பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புக்கு பல்வேறு ரகசிய தகவல்களைப் பரிமாறியதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லான், உளவு வேலை செய்வதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பானது அதிகப் பணம் கொடுத்திருப்பதாகவும், இவர் பாட்டியாலா ராணுவ தளத்தின் புகைப்படங்களை பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் துறை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 பேர், பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது