பாகிஸ்தானுடன் எந்தவொரு அமைதிப் பேச்சுக்கும் இடமில்லை – மோடி திட்டவட்டம்

பாகிஸ்தானுடன் இனிமேலும், எந்தவொரு அமைதி பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா சென்றுள்ள ஆர்ஜென்டினா ஜனாதிபதி நேற்று (திங்கட்கிழமை) இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் பின்னர் இருநாட்டுத் தலைவர்களும் இணைந்து கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். இதன்போதே இந்திய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “பயங்கரவாதம் உலக அமைதிக்கும், நிலைத் தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இதற்கு புல்வாமா தாக்குதல் ஒரு சிறந்த உதாரணம். இந்த தாக்குதலுக்குப் பின்னர் எந்த நாட்டுடனும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. பேச்சுவார்தைக்கான காலமும் கடந்துவிட்டது.

தற்போது பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கை எந்தவகையிலும், எந்த நாட்டின் மீது நடந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது.

அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் அதன் வெளிப்பாடுகளையும் ஒடுக்க வேண்டும். பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகள், அவர்களை ஊக்கப்படுத்துபவர்கள், ஆதரிப்பவர்கள், நிதியுதவி மற்றும் புகலிடம் வழங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என்று அவர் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !