பாகிஸ்தானில் பேருந்து, டீசல் லாரி நேருக்கு நேர் மோதல்- 26 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து, பலூசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கர் பகுதிக்கு நேற்று இரவு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் பயணித்துள்ளனர். பலூசிஸ்தானின் தொழில் நகரமான ஹப் அருகே சென்றபோது, எரிபொருள் ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

எதிரே வந்த டிரக்கில் ஈரானிய டீசல் இருந்ததால் விபத்தின்போது பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பயணிகள் தங்கள் உயிரை காப்பாற்ற பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால், தீப்பிழம்புகள் பேருந்தில் வேகமாக பரவியதால் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

இந்த துயரச் சம்பவத்தில் இதுவரை 26 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைப்பெற்று வருவதாகவும் லாஸ்பேலா துணை ஆணையாளர் ஷபீர் மெங்கல் தெரிவித்துள்ளார். மேலும் 16 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏதீ அறக்கட்டளையின் ஒரு மீட்பு அதிகாரி கூறுகையில், போதிய  வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் இல்லாததால், காயமடைந்தவர்களை நீண்ட தாமதத்திற்கு பின்னரே கராச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தார். மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு தீயில் கருகியிருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !