பழனியில் சூரசம்ஹாரத்தை காண குவிந்த பக்தர்கள் கூட்டம்
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி விழா கடந்த 2ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர்.
மலைக்கோவிலில் தினந்தோறும் உச்சி காலத்தின் போது கல்ப பூஜையும், மாலையில் சண்முகர் தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உச்சிகால பூஜையை தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் செய்யும் வகையில் மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னகுமாரர் வேல்வாங்கும் விழா நடைபெறுகிறது.
அதன் பின் இன்று மாலை 3 மணிக்கு மலைக்கோவில் நடை அடைக்கப்பட்டு சுவாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவார்.
இதனால் காலை 11 மணி வரை மட்டுமே மலைக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மலைக்கோவிலில் இருந்து சின்ன குமாரர் பராசக்தி வேலுடன் வரும் சமயம் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானை சமேத முத்துகுமாரசாமி மயில் வாகனத்தில் அடிவாரம் வந்தடைந்தார்.
திருஆவினன்குடி கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின்பு கிரிவீதியில் இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறும். 4 இடங்களில் நடைபெறும் இந்த விழாவில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதம், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன் வதம், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும்.
சூரசம்ஹாரத்தை காண இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். இதில் கந்தசஷ்டி விழாவிற்காக காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்களுக்கு வாழைத்தண்டு, பழங்கள் மற்றும் தயிரால் செய்யப்பட்ட உணவும், கருப்பட்டி, எலுமிச்சையால் தயாரிக்கப்பட்ட சத்து மிகுந்த பானகம் இறைவனுக்கு படையல் இடப்பட்டது.
பின்னர் அந்த உணவை வாழை இலையில் வைத்து நெய்விளக்கு ஏற்றிவைத்து தங்கள் விரதத்தை முடித்துக் கொண்ட பக்தர்கள் அந்த உணவை பிரசாதமாக வாங்கி சாப்பிட்டனர்.
சூரசம்ஹாரத்தில் பங்கேற்பதற்காக தாரகாசூரன் புறப்பாடாகி சென்றார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு சூரர்களும் புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சூரசம்ஹாரத்தை காண குவிந்துள்ள பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சூரசம்ஹாரத்தை தொடர்ந்து முருகனுக்கு வெற்றி விழாவும், திருக்கல்யாணமும் நடைபெறும்.
பகிரவும்...