பயங்கரவாதத்திற்கு எதிரான துரித வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
ஐஎஸ் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்கு பயங்கரவாத எதிர்ப்பு வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், இதற்கான பொறுப்பை உரிய வகையில் மேற்கொள்ள அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டிருப்பதாகவம் குறிப்பிட்டார்.
நாட்டின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் இவ்வாறான பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறாமல் இருப்பதற்கு தேவையான அரசியல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்
ஐஎஸ் பயங்கரவாதம் நாட்டில் முழுமையாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு மாத காலப்பகுதிக்குள் இந்தப் பணிகளை நிறைவு செய்ய இலங்கையினால் முடிந்துள்ளமை குறித்து சர்வதேசம் பாராட்டுத் தெரிவித்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
புலனாய்வுப் பிரிவைப் பயிற்றுவிப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் சர்வதேச ஒத்துழைப்புக் கிடைத்துள்ளது. இதனால்இ நாட்டை பின்னடைவு காணச் செய்ய இடமளிக்கப்பட மாட்டாது. நாட்டை அபிவிருத்தி செய்ய கூடுதலான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
பொசொன் நோன்மதி தினத்தை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்குமாறு புத்தசாசன அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியதாகவும் பிரதமர் கூறினார்.
அச்சம், பீதியின்றி வாழ்க்கையை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மக்களைக் கேட்டுக்கொண்டார்.