Main Menu

பன்மொழிப் புலவர் தமிழ் பேரறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர் நினைவு தினம்

மொழிவல்லுனர் தமிழ் பேரறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் இறந்து ஆண்டுகள் 71 ஓடி மறைந்துவிட்டன. 1875ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள மானிப்பாய் என்னும் ஊரில் பிறந்த அவர் 1947ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி அதே ஊரிலுள்ள மானிப்பாய் மருத்துவ மனையில் மரணமானார். அவரது 60வது வயதில் அவருக்கு ஏற்பட்டிருந்த நோயினால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உண்டாகியிருந்ததென்றாலும் அந்த ஆபத்திலிருந்து அவர் தப்பிப்பிழைத்திருந்தார். ஆனால் 1947ம் ஆண்டில் அவருடைய 72ம் வயதில் அவரைப் பீடித்திருந்த நெருப்புக்காய்ச்சல் அவருடைய உயிரை விட்டுவைக்கவில்லை.

தமிழ்த்தொண்டு

இவ்வுலகில் அவர் வாழ்ந்திருந்த 72 ஆண்டுகளில் தமிழுக்கும் தான் சேர்ந்திருந்த சமயத்துக்கும் அவர் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியன, மகத்தானவை. அவருடைய பெயரும் புகழும் இலங்கையில் மட்டுமல்ல இந்தியா, ஜேர்மனி போன்ற நாடுகளிலும் பரவியிருந்தன. அவருடைய தமிழ்த்தொண்டை பாராட்டித் தமிழ் நாட்டில் அறிவுக்களஞ்சியங்களாக விளங்கிவரும் ஆதீனங்களில் ஒன்றான திருப்பனந்தாள் மடம் அவரை கௌரவித்து சன்மானமும் வழங்கியிருந்தது. அறிவு ஆராய்ச்சி செய்திறன் ஆகியவற்றுக்கு பெயர் எடுத்திருந்த ஜேர்மனி, சுவாமி ஞானப்பிரகாசரின் பெருமையை உணர்ந்து மதித்து 1939ம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அவருடைய உருவத்துடன் ஒரு முத்திரையை வெளியிட்டு அவரை கௌரவித்தது.

இலங்கை அரசாங்கம் 1981ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி அவருடைய நினைவாக ஒரு முத்திரையை வெளியிட்டிருந்தது. இன்று திராவிட மக்களின் புராதன நாகரிகத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கும் சிந்து நதிப்பள்ளத்தாக்கிலுள்ள் ஹரப்பா , மொஹஞ்சதாரோ நகரங்களின் எழுத்து. ஆராய்ச்சியிலீடுபட்டிருந்த ஹெரஸ் பாதிரியார் என்பவர் தனக்கு ஏற்ப்பட்டிருந்த சில சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவரைத் தேடி வந்து ஆலோசனை கேட்குமளவிற்கு அறிவும் ஆராய்ச்சியும் பெருமையும் கொண்டவராகவிருந்தார்.

ஆசிரியரின் மகன்

எட்டாவது பரராசசேகரின் பரம்பரையில் சைவக்குடும்பத்தில் பிறந்தவர் சுவாமி ஞானப்பிரகாசர். அவர் பிறந்த பொழுது பெற்றோர்கள் அவருக்கு இட்டிருந்த பெயர் வைத்திலிங்கம் என்பதாகும். கனகரத்தினம் என்ற செல்லப்பெயரினால் அவர் அழைக்கப்பட்டார். அவருடைய தந்தையார் ஒரு ஆசிரியர். இராசசிங்கம் சுவாமிநாதன்பிள்ளை என்பது அவருடைய பெயர். தாயார் பெயர் தங்கமுத்து ஆகும். இவர் காடினர் சிற்றம்பலம் என்பவரின் மகளாகும்.

ஞானப்பிரகாசருக்கு 5 வயதிருக்கும்போது அவருடைய தந்தையார் இறந்துவிட்டார். அதன் பின்பு அவருடைய தாயார் அச்சுவேலியிலிருந்த தம்பிமுத்து என்ற கத்தோலிக்கரை மறுமணம் செய்து கொள்வதற்காக அம்மதத்திற்கு சேர்ந்த பொழுது அவருடைய மகனும் கத்தோலிக்க மதத்தில் சேர்க்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு இடப்பட்ட பெயரே ஞானப்பிரகாசம் என்பதாகும். காலப்போக்கில் அவருடைய புகழும் மதிப்பும் வளரத்தொடங்க ஞானப்பிரகாசம் என்ற அவருடைய பெயர் ஞானப்பிரகாசர் என்ற மரியாதையுடன் வழங்கி வரப்படலாயிற்று.

வளர்ப்புத்தந்தை

ஞானப்பிரகாசருடைய வளர்ப்புத்தந்தையார் தம்பிமுத்து அவர்கள் ஒரு நல்ல தமிழ் அறிஞர். அச்சுவேலியில் ஒரு அச்சுக்கூடம் வைத்திருந்து தமிழில் பல கத்தோலிக்க சமய நாடகங்களை வெளியிட்டு வந்தார். சன்மார்க்கப் போதினி என்ற ஒரு சமய சஞ்சிகையையும் வெளியிட்டு வந்தார். இளம் ஞானப்பிரகாசருக்கு அவருடைய அச்சுக்கலையில் பயிற்சி அழித்ததோடல்லாமல் தமிழில் ஆர்வத்தையும் பற்றையும் ஏற்படுத்தி இருந்தார். தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவையும் புகட்டியிருந்தார் ஞானப்பிரகாசர் சிறுவயதிலேயே இலக்கணப்பிழையின்றி விரைவில் கவிதை இயற்றும் ஆற்றல் உள்ளவராக இருந்தார். வயலின் வாசிப்பதிலும் மத்தளம் அடிப்பதிலும் வல்லவராக இருந்தார். சிறந்த பேச்சாளராகவும் இருந்தார்.

இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போது லண்டனில் இருந்து வெளிவந்த ” POETRY LONDON ” என்ற ஆங்கிலக் கவிதைச் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து பல ஆங்கிலக்கட்டுரைகளை ஊக்குவித்த கவிஞர் தம்பிமுத்து (MEARY JAMES THURAIRAJAH)என்பவர் ஞானப்பிரகாசரின் தாய் வயிற்றில் தம்பிமுத்துவுக்குப் பிறந்த பிள்ளைகளில் ஒருவரான ஹென்றி தம்பிமுத்துவின் மகன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியில் தனது படிப்பை முடித்துக்கொண்ட ஞானப்பிரகாசர் 1893ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற ரெயில்வே கிளறிக்கல் பரீட்சையில் மிகத் திறமையாகத் தேர்ச்சியடைந்து கடிகமுவைப் புகைவண்டி நிலையத்தில் பணி புரிந்தார். அங்கு அவர் தன் கடமையில் திறமை காட்டியதன் காரணமாக கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். மோஸ் கோட் மூலம் விரைவாகச் செய்தி அனுப்புவதில் வல்லவராக இருந்தார். அங்கு அவர் தொடர்ந்து பணியாற்றியிருந்தால் அக்காலத்தில் இலங்கையர்களுக்கு அரசாங்கப்பதவிகளில் கிடைத்திருக்கக் கூடிய உயர்ந்த பதவிகளில் ஒன்று அவருக்குக் கிட்டியிருக்கும்.

கத்தோலிக்க குரு

ஆனால் அவர் 1895ம் ஆண்டில், சேவையில் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்குள், அச்சேவையிலிருந்து விலகி கத்தோலிக்க குருவானவர் ஆகும் பொருட்டு யாழ்ப்பாணக் குருமடத்தில் சேர்ந்து கொண்டார். 1901ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி அவர் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்ட பின்பு அவர் தமது சமயக் கொள்கைகளை மக்களுக்கு விளக்குவதற்கும் பரப்புவதற்கும் பல பிரசுரங்களை வெளியிட்டு வரலானார். தர்க்கப்பிரசங்கம் என்ற விவாதங்களை மக்கள் மத்தியில் நடத்திவந்த தோடல்லாமல் அவ்விவாதங்களை வெளியிட்டு மக்களுக்கு வழங்கியும் வந்தார். கத்தோலிக்க சமய சம்பந்தமான சில புத்தகங்களையும் எழுதி வெளியிட்டார். 1896ம் ஆண்டிலிருந்து 1906ம் ஆண்டுவரை அமலோற்பவ இராக்கினித் தூதன் என்னும் மாத சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

சமயத்தொண்டு

யாழ்ப்பாண மேற்றிராசனத்திலிருந்து இதுவரை வேறு எந்த குருவானவரும் செய்திராத அளவுக்கு அவர் பல கோவில்களைக் கட்டுவித்து மீசாம்களை ஏற்படுத்தியிருந்தார். 1946ம் ஆண்டில் அவர் இறப்பதற்கு சற்று முன்பு, அவர் பிறந்த ஊராகிய மானிப்பாயில் அவர் கட்டுவித்திருந்த கோவில் முப்பத்தேழாவது கோவிலாகும் கோவில்களைக் கட்டுவித்ததோடல்லாமல் அங்குள்ள மக்களின் அறிவை வளர்ப்பதற்காக வாசிகசாலைகளையும் அங்கு ஏற்படுத்தி வந்தார். சமயத் தொண்டில் வேகமாக உழைத்து வந்தபொழுதும் அவருடைய தமிழ் ஆர்வமும் பற்றும் அவரைத் தமிழை ஆழமாகப் படிக்கவைத்ததோடல்லாமல் பிற மொழிகள் பலவற்றையும் படிக்கத்தூண்டின. எழுபத்திரண்டு மொழிகளை அவர் அறிந்திருந்தார். அவற்றுள் பெரும்பாலானவற்றை அவர் தாமாகவே கற்றிருந்தார். பன்னிரண்டு மொழிகளில் அவர் மிக்க பாண்டித்தியம் பெற்றிருந்தார்.
மொழிகளில் மாத்திரமின்றி சரித்திரம், தத்துவம், சமயம் முதலியவற்றிலும் அவருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. யாழ்ப்பாணச் சரித்திரத்தை விஞ்ஞான முறைப்படி முதல்முதலாக எழுதியவர் ஞானப்பிரகாசரே. சைவ சமயத்தைப்பற்றி “சைவ சித்தாந்தம்” என்ற நூலை எழுதியிருக்கிறார். “செகராசசேகரன்” என்ற ஒரு நாவலையும் கூட எழுதியிருக்கிறார்.

தமிழ்மொழி தொன்மையானது, தனித்துவமானது, பல மொழிகளுக்குத் தாயானது, சில மொழிகளுக்குக் கடன்கொடுத்து உதவியிருக்கிறது என்பதை அவர் துணிந்து எடுத்துரைத்தார். பல அறிஞர்களின் உழைப்புடன் 1913ம் ஆண்டில் தொடங்கப்பட்டு அக்காலத்தில் 410,000 ரூபா செலவில் 1936ம் ஆண்டு முடிக்கப்பட்டிருந்த சென்னைத் தமிழகராதியிலும் அதன் அனுபந்தத்திலும் வடமொழியிலிருந்து பிறந்த சொற்கள் என்று காட்டப்பட்டிருந்த சொற்களில் பல தொன்மொழியிலிருந்து பிறந்தன என்றும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் எடுத்துரைத்தார். வாதாடினார். கட்டுரைகள் எழுதினார்.

எழுபத்திரண்டு மொழிகளில் அறிவு

எழுபத்திரண்டு மொழிகளில் அவருக்கு இருந்த அறிவும் பலதுறைகளில் இருந்த ஞானமும், அவருடைய மதிநுட்பமும் ஆழ்ந்த அகன்ற ஆராய்ச்சித்திறனும் பல ஆண்டுகள் ஆராய்ந்து செய்தபின்பு எடுத்த முடிவுகளை மறுத்துரைக்க அவருக்குத் துணையாயிருந்தன.

தாய் மொழியின் தொன்மையை, மேன்மையை, தனித்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக ஒப்புயர்வற்ற சொற்பிறப்பு ஒப்பியல் என்னும் அகராதியைத் தன்னந்தனியாகத் தானே தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகளில் தான் திட்டமிட்டிருந்த இருபது பாகங்களில் ஆறு பாகங்களை வெளியிட்டிருந்தார். எஞ்சிய பாகங்களின் சொற்களில் பெரும்பாலானவற்றை ஆராய்ந்து கையெழுத்துப் பிரதிகளில் வைத்திருந்தார். அவற்றை அவர் வெளியிடுவதற்கு முன்பு காலன் அவரின் உயிரைப்பறித்துச் சென்றது தமிழ் மக்களின் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.

சுவாமி ஞானப்பிரகாசரின் வாழ்க்கையை, அவர் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த பணியைத் தமிழ் இளைஞர்கள் ஒரு முன்மாதிரியாக ஒர் இலட்சியமாகக் கொண்டு வாழ வேண்டும். அவரைப்போல் பல மொழிகளிலும் பல துறைகளிலும் வல்லவர்களாக வராவிட்டாலும் ஒரு மொழியிலும் ஒரு துறையிலும் ஆகிலும் வல்லவராக வரமுயல வேண்டும். வரவேண்டும். அப்பொழுது தான் தமிழ் வளமாக வாழும், தமிழ் மக்கள் நலமாக வாழ்வார்கள்.

***************************************************

ஞானப்பிரகாசர் சிறு வயதிலேயே இலக்கணப் பிழையின்றி விரைவாகக் கவிதை புனையும் ஆற்றல் கைவரப்பெற்றார். வயலின், மத்தளம் போன்றவற்றை வாசிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார்.
இவருடைய வளர்ப்புத் தந்தையான தம்பிமுத்துவிடம், தமிழ்ச் செய்யுள், தமிழக வரலாறு, தமிழ் இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார்; பின்னாளில் தான் விரும்பியபடி திருமறைப் பணியாளராகப் பயின்று குருவானார்.
ஞானப்பிரகாசர் கால்டுவெல்லின் திராவிட மொழி ஒப்பிலக்கணம், கதிரைவேலரின் தமிழ் அகராதி ஆகியவற்றை விரும்பிப் படித்து, வேர்ச்சொல் ஆய்வில் ஈடுபட்டார். தமிழே உலகின் உயர்தனிச் செம்மொழி என்று பதினெட்டுச் சான்றுகளுடன் உறுதிபட எடுத்துரைத்த இவர், செந்தமிழ்ச் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி தந்தார். “தமிழ் அமைப்புற்றது எவ்வாறு’, “தமிழில் வேர்ச்சொல் ஆய்வுகள்’, “தமிழ் வேர்ச்சொல் ஒப்பியல் பேரகராதி’ ஆகிய மூன்று அரிய நூல்களைப் படைத்தார். இவரின் ஆய்வினை அடிப்படையாகக் கொண்டே தேவநேயப் பாவாணர் சொற்பிறப்பு ஒப்பியல் அகர முதலியை உருவாக்கப் பாடுபட்டார் என்று கூறுவர்.
நல்லூர் ஞானப்பிரகாசர் தனது சமயப் பணியை ஆற்றும்போது, தமிழ்ப் பணியையும் தொடர்ந்து ஆற்றிவந்தார். கிறிஸ்தவராக இருந்துகொண்டு இவர் ஆற்றும் தமிழ்த் தொண்டினை இந்து, இஸ்லாம் சகோதரர்கள் பெரிதும் மதித்தனர். இந்து சமய மடாதிபதிகள் ஞானப்பிரகாசருடன் தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் பற்றி அளவளாவிப் பெரிதும் இன்புற்றனர். பிற சமயத்தாரின் பேரன்பைப் பெற்ற நல்லூர் ஞானப்பிரகாசர் மென்மேலும்
தமிழ் ஆய்வில் தனது கவனத்தைச் செலுத்தி, வேர்ச்சொல் ஆய்வில் முழுமையாக ஈடுபட்டார்.
ஞானப்பிரகாசர், சிந்து சமவெளி நாகரிகம் தமிழரின் நாகரிகம் என்ற ஈராஸ் அடிகளாருடன் இணைந்து, சிந்து சமவெளி நாகரிகத்தால் தமிழரின் பண்பாடு சிறந்துள்ளதையும், தமிழ்மொழியின் தொன்மையையும் தெளிவுபடுத்தினார். சிங்கள மொழியில் திராவிட மொழிக் கூறுகளை இவர் எடுத்து விளக்கியபோது, இவருக்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இவரின் கருத்தை பிற நாட்டு மொழியறிஞர்கள் ஏற்று ஆதரவு தெரிவித்தனர். இலங்கை அரசு இவரை வரலாற்றுச் சுவடிகளின் ஆய்வுக் குழுவில் நியமித்து கெüரவித்தது.
இவரை ஜெர்மன் மொழியறிஞர்கள் தங்கள் நாட்டிற்கு அழைத்து, தமிழின் பழைமையையும் பெருமையையும் அறிந்து கொண்டு, இவரைப் பெரிதும் பாராட்டினர். ஜெர்மன் அரசு இவரது உருவம் பொறித்த அஞ்சல் தலை (முத்திரை) வெளியிட்டு பெருமை செய்தது.
குடும்ப வாசகம், அமலோற்பவ இராக்கினி தூதன் ஆகிய இரு இதழ்களுக்கு இவர் ஆசிரியராக இருந்தார். திங்கள் இதழ்களான இவை தவிர, “சத்திய வேதப் பாதுகாவலன்’ என்னும் வார இதழுக்கும் ஆசிரியராய் இருந்தார். இவற்றில் திருமறைக் கோட்பாடுகளையும், இறையியல் கோட்பாடுகளையும், மக்களின் வாழ்க்கையோடு இயைந்து விளக்கி வந்தார்.
ஞானப்பிரகாசர், தமிழரின் தொன்மை வரலாறும் சமயமும், யாழ்ப்பாண வரலாற்று ஆய்வு, கத்தோலிக்க திருச்சபையும் அதன் போதகர்களும், போர்த்துக்கீசியர் – ஒல்லாந்தர் கால யாழ்ப்பாண வரலாறு, யாழ்ப்பாண அரசர்கள் ஆகிய அரிய நூல்களைப் படைத்தார்.
இவர் படைத்த செகாச சேகரன் புதினமும், சுப்பிரமணிய ஆராய்ச்சி, பிள்ளையார் ஆராய்ச்சி ஆகிய நூல்களும் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டன.
பன்மொழிப் புலவரான நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசருடைய தமிழ்த் தொண்டினைப் பாராட்டித் திருப்பனந்தாள் மடம் அவரை கெüரவித்து சன்மானமும் வழங்கியிருக்கிறது.
இவர் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட தேவாலயங்களைக் கட்டுவித்துள்ளார். மேலும், பல வாசக சாலைகளையும் ஏற்படுத்தியுள்ளார்.
1947ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி மானிப்பாய் மருத்துவமனையில் இவர் காலமானார்.

 

பகிரவும்...
0Shares