பதில் அமைச்சர்கள் நியமன மோதல் உச்சம் – பணியாற்ற வேண்டாமென ரணில் உத்தரவு
ஐதேகவைச் சேர்ந்த பதில் அமைச்சர்களான, லக்கி ஜயவர்த்தன, புத்திக பத்திரன, அனோமா கமகே ஆகியோரை, அந்தப் பதவிகளுக்கான கடமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட பதில் அமைச்சர்களின் நியமனம், அரசியலமைப்பு மீறல் என்பதாலேயே, சிறிலங்கா பிரதமர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
கட்சியின் ஒப்புதலைப் பெறாமல் இந்த நியமனங்களை ஏற்றுக்கொண்டதால், எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்களின் நடவடிக்கை அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சர்களாக இருந்து பதவி விலகிய ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், கபீர் ஹாசிம் ஆகியோரது இடங்களுக்கே, பதில் அமைச்சர்களாக லக்கி ஜயவர்த்தன, புத்திக பத்திரன, அனோமா கமகே ஆகியோரை சிறிலங்கா அதிபர் நியமித்திருந்தார்.
எனினும், இந்த நியமனங்கள் குறித்து சிறிலங்கா பிரதமருடன், அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடவில்லை என்று ஐதேக வட்டாரங்கள் தெரிவித்தன.
பதில் அமைச்சர்களின் நியமனங்கள் சட்டரீதியானது அல்ல என்பதால், அவர்களை புதிய பொறுப்புகளில் பணியாற்ற வேண்டாம் என்று சிறிலங்கா பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நியமனங்கள் தொடர்பாக, சிறிலங்கா அதிபருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
நாளை அமைச்சரவைக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், பதில் அமைச்சர்கள் அதில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.