பதவியிலிருந்து என்னை விலக்கினால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படும் : தெரேசா மே!

பிரதமர் தெரேசா மே மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ள நிலையில் பிரதமர் பதவியிலிருந்து தன்னை நீக்கினால் அது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்குமெனவும் நிச்சயமற்ற நிலையை உருவாக்குமெனவும் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் தன்னால் இயன்ற அளவுக்கு இவ்வாக்கெடுப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிதாக தெரிவு செய்யப்படும் பிரதமர் பிரெக்ஸிற்றை முழுமையாக ரத்து செய்யும் நிலையோ அல்லது தாமதப்படுத்தும் நிலையோ ஏற்படுமெனவும் அவர் எச்சரித்தார்.

கட்சிக்குள் ஏற்படும் இப்பிளவு தேசிய நலனை பாரிய அளவில் பாதிக்குமெனவும் பல வருடங்களாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் தனது பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் பிரெக்ஸிற்றின் பின்னரும் பிரித்தானியாவை முன்னேற்றப்பாதையில் அழைத்துசெய்வதற்கும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மக்கள் அனைவருக்கும் ஏற்ற நாடொன்றை கட்டியெழுப்புவது கொன்சர்வேற்றிவ் கட்சியினரின் கடமை என கூறிய பிரதமர் மக்கள் விரும்பும் பிரெக்ஸிற்றை அவர்களுக்கு வழங்குவது அவசியமெனவும் நிருபர்களிடம் கூறினார்.

“பிரதமர் பணிக்காக இன்றுவரை நான் என்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறேன் அத்துடன் நான் ஆரம்பித்த பணியை செய்துமுடிப்பதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன்” என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !