“ பண்டிதமணி “ ( பேராசிரியர் கணபதிப்பிள்ளை ) நினைவுக்கவி
என் தமிழ்ஆசானின் ஆசான்
ஆசான்களுக்கு எல்லாம் ஆசான்
இலங்கையின் தமிழ்த்துறைப் பேராசான்
பேராசிரியர்கள் பலரையும் உருவாக்கிய ஆசான்
சிந்தனையாளன் சீர்திருத்தவாதி
அற்புதமான விவேகி, அதிதிறமைசாலி
இசையோடு கவிபாடும் வித்தகர்
பங்குனித் திங்கள் பதின்மூன்றில்
இவ்வுலக வாழ்வைத் துறந்தாரே !
நீதிதான் கடவுளின் வடிவமென
நீதியோடு வாழ்ந்து காட்டிய மகான்
பிரமச்சரிய வாழ்வு வாழ்ந்த மானிடன்
பிரபலமானார் இருபதாம் நூற்றாண்டில்
இலக்கிய உலகின் படைப்பாளி
இலக்கியக் கடலில் ஆழ முத்தெடுத்தாரே !
இனியகுரல் புன்முறுவல் பூத்தமுகம்
எவரையும் கவரும் வசீகரம்
நேரிய சிந்தனை நேர்மைப் போக்கு
நேசிப்போ ஆய்வுத்துறை
படைப்புத் துறையிலும் காட்டினார் ஆர்வம் !
இலக்கியவழி படைத்திட்ட இலக்கியக்கலாநிதி
இருநாடகம், நானாடகம் தந்த பெருந்தகை
இலங்கைப் பல்கலைக் கழகத்திலும்
ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்திலும்
இரட்டைக் கலாநிதிப் பட்டத்தைப் பெற்று
சாதனை படைத்திட்ட ஒரே மனிதர் !
விசுவாசம் மிக்க மாணவர் பரம்பரையை
விட்டுச் சென்ற பெருந்தகை
எண்பத்தியாறு ஆண்டுகள் தமிழோடு வாழ்ந்து
அறுபது ஆண்டுகள் எழுத்தோடு பயணித்து
இவ்வுலகை விட்டு மறைந்தாரே
பங்குனித் திங்கள் பதின்மூன்றிலே
இலக்கியக் கலாநிதி பண்டிதமணி ஐயா !
கவியாக்கம் – ரஜனி அன்ரன் ( B.A ) 13.03.2019