படையினர் வசமிருந்த கட்டிடங்கள் உத்தியோக பூர்வமாக கையளிப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் படையினர் வசமிருந்த கட்டிடங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி சைவமங்கையர் கழகத்தின் கட்டிடங்களே நேற்று (வியாழக்கிழமை) மாலை உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த காணிக்கான ஆவணத்தை மன்னார் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு, சைவமங்கையர் கழகத்தின் தலைவி திருமதி யோகேஸ்வரா சிவாநந்தினியிடம் கையளித்துள்ளார்.

இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச செயலகத்தின் காணி உத்தியோகஸ்தர் வசந்தன், கிராம அலுவலகர்கள், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த கட்டடங்கள் அமையப்பெற்ற காணி ஐந்து ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஒரு சிறிய பௌத்த குருமடம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. விகாராதிபதிகளுடன் கலந்துரையாடி குறித்த குருமடம் அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் சைவமங்கையர் கழகம், போர் காரணமாக மருத்துவ சேவை நிலையமாக இயங்கி வந்தது.

அத்தோடு, 1990 தொடக்கம் 2009 வரை இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

2009 ஆம் ஆண்டு நாட்டில் சுமூகமான நிலை ஏற்பட்டதால், சைவமங்கையர் கழக தலைவியால் ஜனாதிபதி மற்றும் வடமாகான ஆளுநரிடம், கழகக் கட்டிடத்தை இராணுவத்தினரிடமிருந்து பெற்றுத்தருமாறு தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதற்கமைய ஜனாதிபதியின் தனியார் காணிகளை விடுவிக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக, குறித்த கட்டிடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !