பசியால் வாடிய மழலைகளுக்கு தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ள பெண்!

அமெரிக்காவில் சமீபத்தில் உருவான ஹார்வே புயல் டெக்ஸாஸ் மாநிலத்தை துவம்சம் செய்தது. முக்கிய நகரான ஹூஸ்டன் புயலினால் சின்னா பின்னாமானது. சாலையெங்கும் வெள்ளம், தங்கியிருந்த வீடுகள் நாசம் என ஹார்வே புயல் பல நகரங்களை பதம் பார்த்தது. மின்சாரம் இல்லாமல் பல பகுதிகள் இருளில் மூழ்கியதால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வந்தனர்.

மேலும், முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பால், பால் பவுடர் போன்ற குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

தற்போது புயல் ஓய்ந்து நிவாரணப் பணிகள் அங்கு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புயலினால் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு சுமார் 30 லிட்டர் அளவுக்கு தாய்ப்பால் தானமாக ஒருவர் வழங்கிய செய்தி இணையதளத்தில்
வைரலாகியுள்ளது.

மிசெளரி மாகாணத்தைச் சேர்ந்த டெனில்லா பால்மர் தான் இந்த செய்திக்கு சொந்தக்காரர். பால்மரின் குழந்தைக்கு பிறக்கும் போதே இருதயநோய் இருந்துள்ளது. இதனால், தாயின் மார்பில் நேரடியாக பால் குடிக்க முடியாத நிலையில் அக்குழந்தை இருந்துள்ளது.

இதனை நினைத்து பால்மர் வேதனைப்பட்டாலும், தன் குழந்தைக்காக தாய்ப்பாலை குப்பிகளில் சேகரித்து ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். டெக்ஸாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட புயலினால் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் பல குழந்தைகள் பால் கிடைக்காமல் அவதிப்படுவதை பால்மர் தொலைக்காட்சிகள் வாயிலாக அறிந்துள்ளார்.

இதனையடுத்து, தனது ஃப்ரிட்ஜில் தன்னுடைய குழந்தைக்காக சேமித்து வைத்திருந்த 1,040 தாய்ப்பால் குப்பிகளை (சுமார் 30 லிட்டர்) பால் இன்றி தவிக்கும் மற்ற குழந்தைகளுக்காக ஹூஸ்டன் நகருக்கு பால்மர் அனுப்பிவைத்துள்ளார். இதன் மூலம் 346 குழந்தைகள் பசியாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் தானமாக வழங்கிய இந்த தாய்க்கு சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், பால்மர் மகனுக்கு இருக்கும் இருதய நோய் விரைவில் குணமாகும் என ஆறுதல் வார்த்தைகளையும் அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !