நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 70க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கடத்தல்!
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 70க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் வடமேற்கில் சாம்பாரா மாநிலத்தில் உள்ள அரச பாடசாலையிலிருந்து இந்த மாணவர்கள், நேற்று (புதன்கிழமை) ஆயுத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சாம்பாரா மாநில பொலிஸ் செய்தித் தொடர்பாளர் முகமது ஷேஹூ கூறுகையில், ‘மராதூன் பகுதியைச் சேர்ந்த கயா கிராமத்தில் அமைந்துள்ள மேல்நிலைப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆயுத கும்பலால் அங்குள்ள 73 மாணவர்கள் கடத்தப்பட்டனர்.
மாணவர்களை விடுவிக்க பொலிஸ்துறை மீட்புக் குழுக்கள் இராணுவத்துடன் இணைந்து செயற்படுகின்றது’ என கூறினார்.
உள்நாட்டில் ‘கொள்ளைக்காரர்கள்’ என்று அழைக்கப்படும் குற்றவாளிகளின் கும்பல்கள் பல ஆண்டுகளாக உள்ளூர் சமூகங்களிடையே அச்சத்தை பரப்பி வருகின்றன, ஆனால் பாதுகாப்புப் படைகள் சமீபத்தில் மோசமான வன்முறையைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றன.
டிசம்பர் மாதம் முதல் வடக்கு நைஜீரியாவில் உள்ள பாடசாலைகளில் இருந்து 1,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
கடத்தல் கும்பல்களின் மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து பெரும் பணத்தைக் கோருகின்றனர். அதை கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
மேலும் பெரும்பாலான மாணவர்கள் இறுதியில் விடுவிக்கப்பட்டாலும், சிலர் சிறைபிடிக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர்.