நெல்லை கண்ணனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!
பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நெல்லை கண்ணனை எதிர்வரும் 13ஆம் திகதிவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பா.ஜ.க தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நெல்லை கண்ணன் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.